Sunday, September 27, 2026

 


இஸ்லாத்தில் கடைபிடிக்க வேண்டிய நற்செயல்கள்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

                    

                       

                              

ஒருவர் கடைபிடிக்கும் நற்செயல்கள் அவரை அல்லாஹ்விடம் நெருக்கமாக்கி, அவனது திருப்தியையும், வெகுமதி யையும் பெற்றுத்தரும்.  தூய எண்ணத்துடன் செய்யப்படும் ஒரு சிறிய நற்செயல், அதனை விடப் எடையில்  பெரிய ஒரு செயலை செய்வதை விட அதிக வெகுமதி உண்டு என்று அல்லாஹ் வாக்குறுதியளிக்கின்றான்.

“ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.”. [அந் நஹ்ல், 16:97]

“புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர் களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறு திகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத் திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடைய வர்கள்)..” (2:177).

 

                     ஆன்மீகச் செயல்கள்

★ தவ்ஹீத்: "ஒரே இறைவன், அவன் தான் அல்லாஹ்" என்பது மட்டுமே அல்லாஹ் சுப்ஹானஹுவதாலா விடத்தில் சிறந்த செயல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அல்லாஹ்  சுப்ஹானஹுவதாலாவையும் அவனது தூதரையும் [ஸல்] நம்புவதும், அவனை வணங்குவதும் ஒருவரை ஆன்மீகவாதியாக ஆக்குகிறது. இது ஒரு முஸ்லிம் சிறந்த  வாழ்க்கை வாழ வழிவகுக்கிறது. வாஹீதான அல்லாஹ் தன் குர்ஆனில் கூறுகின்றான்:  “அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்” [4:36].

★ கடமைகளை நிறைவேற்றுவது: சரியான நேரத்தில் தொழுகையை நிலைநிறுத்துதல், தவறாமல் ஜகாத் செலுத்துதல், ரமலானில் நோன்பு நோற்றல் மற்றும் ஹஜ் செய்தல் போன்ற நமது கடமைகளை நிறைவேற்றுவது ஒருவரை அல்லாஹ்விடம் நெருக்கமாக்குகிறது. உடல்  மற்றும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துகிறது. அதனால் தான் அல்லாஹ் அவற்றை ஒரு முஸ்லிமிற்கு கடமையாக்கி இருக்கின்றான்.

★ பள்ளிவாசல் சென்று ஜமாஅத்தாகத் தொழுவது: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் காலையிலும் மாலையிலும் பள்ளிவாசலுக்குச் செல்கிறாரோ, அவர் ஒவ்வொரு முறையும் சென்று வரும்போதும் அல்லாஹ் அவருக்குச் சுவனத்தில் கண்ணியமான இடத்தைத் தயார் செய்கின்றான்.” (புகாரி, 631)

அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் ஃபஜ்ர் தொழுகை யை ஜமாஅத்துடன் தொழுது, பிறகு சூரியன் உதயமாகும் வரை அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவாறு (திக்ர், துஆ, குர்ஆன் ஓதுதல் போன்ற வணக்கங்களில் ஈடுபட்டு) அமர்ந்திருந்து, பின்னர் இரண்டு ரக்அத்கள் (இஷ்ராக் தொழுகை) தொழுவாரோ, அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ரா செய்ததைப் போன்ற நன்மை உண்டு.” (அறிவிப்பாளர்) கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘முழுமையானது, முழுமையானது’ என்று கூறினார்கள்.” (ஜாமிஉத் திர்மிதீ, 586)

★ தவ்பா செய்வது: ஒருவர் தனது பாவங்களுக் காகப் பாவ மன்னிப்புக் கோரி கஃபூருர்-ரஹீமான அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதும் மிகுந்த நற்கூலி தரும் செயலாகும். அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி, தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பவர்களை அவன் நேசிக்கிறான்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உங்களில் ஒருவர், தனது உணவையும் பானத்தையும் சுமந்துகொண்டு ஒரு பாலைவனத்தில் பயணம் செய்யும்போது, தனது சவாரி விலங்கைத் தொலைத்துவிட்டால், அவன் தன் விலங்கைப் பற்றி விரக்தியடைந்து, ஒரு மரத்தின் நிழலில் படுத்துக்கொள்ள அவ்விடத் திற்கு வரும்போது, எல்லா நம்பிக்கையையும் இழந்துவிடுகிறான். ஆனால் திடீரென்று, அது அவன் அருகில் நிற்பதைக் காண்கிறான். அவன் அதன் கடிவாளத்தைப் பற்றிக்கொள்கிறான். பின்னர் அவன், ‘யா அல்லாஹ், நீ என் அடியான், நான் உன் இறைவன்!’ என்று கூறிப் பெருமகிழ்ச்சி அடைகிறான். தனது பெரும் மகிழ்ச்சியின் காரணமாக அவன் தவறு செய்கிறான்.” அவரை விட அல்லாஹ் தன் அடியாரின் பாவமன்னிப்பில் அதிக மகிழ்ச்சி அடைகிறான்.  [ஸஹீஹ் முஸ்லிம், 2747 – ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ] 

★ நஃபில் தொழுகைகளை நிறைவேற்றுவது: தஜ்ஜுத், தஹிய்யத்துல் மஸ்ஜித், ஸலாத்துல் இஷ்ராக், ஸலாத்துல் துஹா, லுஹர் மற்றும் அஸ்ர் சுன்னத் போன்ற நஃபில் தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு அதற்கே உரிய நன்மைகள் உண்டு.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்: "நிச்சயமாக, மறுமை நாளில் ஓர் அடியான் அவனுடைய செயல்களில் முதன்முதலில் கணக்குக் கேட்கப்படுவது அவனது தொழுகையாகும். அது சீராக அமைந்தால், அவன் வெற்றியடைந்து ஈடேற்றம் பெறுவான்; அது சீர்கெட்டு இருந்தால், அவன் தோல்வியடைந்து நஷ்டமடைவான். அவனது கடமையான (ஃபர்ளு) தொழுகையில் ஏதேனும் குறை இருந்தால், மகத்துவமும் உயர்வும் மிக்க இறைவன் கூறுவான்: 'பாருங்கள்! என் அடியானுக்கு ஏதேனும் உபரியான (நஃபில்) தொழுகைகள் இருக்கின்றனவா?' (என்று). அவற்றைக் கொண்டு, அவனது கடமையான (ஃபர்ளு) தொழுகையில் இருந்த குறை பூர்த்தி செய்யப்படும். பின்னர் அவனது மற்ற செயல்களும் அவ்வாறே (கணக்கிடப்)படும்.'" (ஜாமிஉத் திர்மிதீ, 413)

★ குர்ஆனைக் கற்பது, ஓதுவது மற்றும் கற்பிப் பது: உஸ்மான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் குர்ஆனைக் கற்று, அதைப் (பிறருக்குக்) கற்பிப்பவரே ஆவார்." [ஸஹீஹுல் புகாரி, 5027)

அபூ உமாமா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை தாம் கேட்டதாகக் கூறினார்கள்: குர்ஆனை ஓதுங்கள், ஏனெனில் மறுமை நாளில் அதை ஓதுவோருக்காக அது பரிந்துரைக்கும். [ஸஹீஹ் முஸ் லிம் 804a - ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள் ளது]

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக் கிறார்கள்: “…யார் அறிவைத் தேடிப் பாதையில் செல்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் அந்தப் பாதையைச் சுவனத்திற்கு இட்டுச் செல்லும் வகையில் எளிதாக்குவான். மேலும், அல்லாஹ் வின் இல்லங்களில் ஒன்றான மசூதியில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, குர்ஆனைக் கற்று, (தங்களுக்குள்) மற்றவர் களுக்குக் கற்பிப்பவர்கள் மீது அமைதியும் கருணையும் இறங்கும். வானவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்வார்கள். மேலும், அல்லாஹ் தனக்கு நெருக்கமானவர்களின் முன்னிலையில் அவர்க ளைப் பற்றிக் குறிப்பிடுகிறான். மேலும், குறைந்த நற்செயல்களைச் செய்யும் (உயர்ந்த) வம்சாவளி அவரை முன்னே செல்ல வைக்காது.” [ஸஹீஹ் முஸ்லிம் 2699a - ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது]

★ திக்ர் செய்வது: அதாவது சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றுவது, சுப்ஹானல்லாஹி-ல்-அஸீம், அஸ்தக்ஃபிருல் லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ் மற்றும் லா ஹவ்ல வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ் என கூறுவது ஆகியவை உள் அமைதியையும் உறுதியையும் தருகின்றன.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் ஒவ்வொரு ஸலாத்திற்குப் பிறகும் முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' என்று கூறி, அல்லாஹ்வை மகிமை படுத்துகிறாரோ, முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைப் புகழ்கிறாரோ, முப்பத்து மூன்று முறை  அல்லாஹு அக்பர் என்று கூறி அல்லாஹ்வை உயர்த்துகிறாரோ; மற்றும்  'லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல்-முல்கு வ லஹுல்ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷை'இன் கதிர்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே; அவனுக்கு இணை இல்லை; அவனுக்கே ஆட்சி உரியது)  அவனுக்கே எல்லாப் புகழும் உரியது, மேலும் அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் உடையவன்), என்று நூறு முறை கூறுகிறாரோ, அவரது பாவங்கள் மன்னிக்கப்படும், அவை கடலின் நுரையைப் போல ஏராளமாக இருந்தாலும் சரி." [புலூக் அல்-மரம், புத்தகம் 2, ஹதீஸ் 217- ஆங்கிலத் திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது].

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் ஒரு நாளில் நூறு முறை 'ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என்று கூறுகிறாரோ, அவருடைய பாவங்கள் (அனைத்தும்) நீக்கப்படும், அவை கடலின் நுரை அளவு இருந்தாலும் சரியே." [ஸஹீஹுல் புகாரி, 6405].

★ ஜிஹாத்: இந்த வார்த்தையின் அரபு அர்த்தம் "முயற்சி" அல்லது "போராட்டம்" என்பதாகும். இஸ்லாத்தில், இது ஒரு தனிநபரின் உள் உள்ளுணர்வுகள், வறுமை, அறியாமை, அநீதி மற்றும் பெற்றோர் இருவருக்கும் நன்மை செய்தல் ஆகியவற்றுக்கு எதிரான அகப் போராட்டம்,  மற்றும் விரோதிகளுக்கு எதிராக ஒரு நல்ல முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதற்கான போராட்டம் ஆகும்.

★ சந்தைக்குச் செல்லும்போது அல்லாஹ்வை நினைவு கூறுவது: உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் கடைவீதிக்குள் நுழைந்து, (பின்வரும் துஆவை ஓதுகிறாரோ): ‘லா இலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீது, வ ஹுவ ஹய்யுன் லா யமூத்து, பியதிஹில் கைரு, வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர்’ (பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் யாவும் உரியது. அவனுக்கே புகழனைத்தும் உரியது. அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான். அவன் (என்றும்) உயிருடன் இருப்பவன்; மரணிக்கவே மாட்டான். நன்மைகள் அனைத்தும் அவன் கையிலேயே உள்ளன. அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்)” என்று கூறுகிறாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து இலட்சம் நன்மைகளைப் பதிவு செய்வான்; அவரிடமிருந்து பத்து இலட்சம் தீமைகளை அழித்து விடுவான்; மேலும், அவருக்கு பத்து இலட்சம் படித்தரங்களை உயர்த்துவான்.” [ஜாமிஉத் திர்மிதீ, 3428]

                                        

                     தனிப்பட்ட செயல்கள்


★ ஹராமான விஷயங்களைத் தவிர்ப்பது: ஷிர்க் மற்றும் விபச்சாரம் செய்வது, பன்றி இறைச்சி, இறந்த விலங்குகள், இரத்தம், அல்லாஹ்வைத் தவிர மற்ற தெய்வங்களுக்குப் படைக்கப்படும் உணவு உண்பது, மது, சூதாட்டம், வட்டி வாங்குதல் மற்றும் பாவம் செய்தல் போன்ற ஹராமான விஷயங்களைத் தவிர்ப்பது

 ★ பெற்றோரை பராமரிப்பது: இறைவணக் கத்திற்கு பிறகு அல்லாஹ் கட்டளையிட்ட அடுத்த நற்செயல், பெற்றோரை அன்புடன் கவனித் துக்கொள்வதும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதும் ஆகும். அல்லாஹ் தன் குர்ஆனில் கூறுகிறான்:  “பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர் களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்தி லிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விரு வரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை (ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!” (17: 23 & 24)

★ கஷ்டமான காலங்களில் பொறுமையுடன் இருப்பது: (நபியே!) நீர் கூறும்: “ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனிடம் பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசால மானது; பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.” (அஜ்ஜுமர், 39:10) and "(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.” (ஸூரத்து ஹூது, 11:115)

★ நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் இருப்பது மற்றும் உண்மையைப் பேசுவது. அல்லாஹுதாஆலா குர்ஆனில் கூறுகிறான்: "ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர் களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்” (9:119).

 " நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.” (28:26)

“நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர் களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டும்..." (4:58).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நீங்கள் உண்மையைப் பேசுவது கடமையாகும், ஏனெனில் உண்மை நன்மைக்கு வழிவகுக்கிறது, நன்மை சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறது, மேலும் உண்மையைப் பேசுபவர் மற்றும் உண்மையைப் பேச முயற்சிப்பவர் இறுதியில் அல்லாஹ்விடம் உண்மையாளராகப் பதிவு செய்யப்படுகிறார், மேலும் பொய் சொல்வதிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் பொய் சொல்வது ஆபாசத்திற்கு வழிவகுக்கிறது, ஆபாசம் நரக நெருப்பிற்கு வழிவகுக்கிறது, மேலும் பொய் சொல்லிக் கொண்டிருப்பவர் மற்றும் பொய் சொல்ல முயற்சிப்பவர் அல்லாஹ்விடம் பொய்ய ராகப் பதிவு செய்யப்படுகிறார். [ஸஹீஹ் முஸ்லிம், 2607c  - ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது]

★ நீதியின் மீது நிலைத்திருப்பது: அல்லாஹ் கூறுகின்றான்., “முஃமின்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப் பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பி னும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர் களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சி யம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல் வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மை யான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடை யவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான் “ [4:135]

★ தவறுகளுக்கு மன்னிப்புக் கோருவது: "இன்னும் தீமைக்கு கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்" (அஷ்- ஷூரா, 42:40).

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எவரிடமேனும் தம் சகோதரருக்கு இழைத்த அநீதி இருக்குமானால், அதிலிருந்து அவர் (இவ்வுலகிலேயே) விடுபட்டுக்கொள்ளட்டும். ஏனெனில், அங்கே (மறுமையில்) தீனாரோ திர்ஹமோ இருக்காது. (அநீதி இழைத்தவரின்) நற்செயல்களிலிருந்து அவருடைய சகோதரருக்கு (பழிவாங்கலாக) எடுக்கப்படுவதற்கு முன்னால் (அவர் இவ்வுலகிலேயே தீர்த்துக்கொள்ளட்டும்). அவரிடம் நற்செயல்கள் ஏதும் இல்லையென்றால், அவருடைய சகோதரரின் தீய செயல்களிலிருந்து எடுக்கப்பட்டு, இவர் மீது சுமத்தப்படும்" [ஸஹீஹுல் புகாரி,  6534]

★ “பிஸ்மில்லாஹ்” கூறுவது: எளிய ஆனால் மிக முக்கியமான செயல். பிஸ்மில்லாஹ்” கூறி தொடங்கிய அந்தச் செயல் ஆசீர்வதிக்கப்பட்டு, வெகுமதி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: “உங்களில் எவரேனும் உணவு உண்டால், அவர் பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால், அவர் பிஸ்மில்லாஹ் ஃபி அவ்வலிஹி வ ஆகிரிஹி (ஆரம்பத்திலும் முடிவிலும் அல்லாஹ்வின் பெயரால்) என்று கூறட்டும்.’ (சுனன் இப்னுமாஜா, 3264)

அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் தனது வீட்டை விட்டு வெளியேறும்போது: 'பிஸ்மில்லாஹி, தவக்கல்து அலல்லாஹி, வ லா ஹவ்ல வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்' (பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (நான் புறப்படுகிறேன்); நான் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கிறேன்; அல்லாஹ்வைக் கொண்டல்லாமல் (பாவத்திலிருந்து விலகுவ தற்கோ அல்லது நன்மை செய்வதற்கோ) எந்த சக்தியும் இல்லை, எந்த ஆற்றலும் இல்லை) என்று கூறுவாரோ, அவருக்கு 'நீர் நேர்வழி காட்டப் பட்டீர், போதுமாக்கப்பட்டீர் மற்றும் பாதுகாக்கப் பட்டீர்' என்று கூறப்படும். ஷைத்தான் அவரை விட்டு விலகிவிடுவான்". (ரியாதுஸ் ஸாலிஹீன், 83)

உஸ்மான் பின் அபூ அல்-ஆஸ் (ரலி) அவர்கள் தமது உடலில் வலி இருப்பதாக முறையிட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்: "உமக்கு வலி உள்ள இடத்தில் உம் கையை வைத்து, மூன்று முறை பிஸ்மில்லாஹ் கூறவும், மேலும் ஏழு முறை "அஊது பில்லாஹி வ குத்ராதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹதீரு" என்று கூறவும். (ஸஹீஹ் முஸ்லிம் 2202 - ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ).

★ அறிவைத் தேடுவது: அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்….” [சுனன் இப்னுமாஜா, 224].

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவர் அறிவைத் தேடி ஒரு பாதையில் செல்கிறாரோ, அவருக்கு சுவர்க்கத் திற்கான பாதையை அல்லாஹ் எளிதாக்கு கிறான்." [ஜாமிஉத் திர்மிதீ, 2646]

★ நன்னடத்தையைப் பெறுவது: நன்னடத்தை பெறுதல் என்பது இஸ்லாத்தில் மிக முக்கியமான மற்றும் பெரிதும் ஊக்குவிக்கப்படும் செயல்களில் ஒன்றாகும். மஸ்ரூக் (ரஹ்) அவர்கள்: "உங்களில் சிறந்தவர்கள் மிகச்சிறந்த நற்பண்புகளை உடையவர்களே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று தெரிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, 6029).


                          சமூகச் செயல்கள்


★ ஒருவர் தீங்கு விளைவித்தால் சிறந்ததைக் கொண்டு அதனன சரி செய்வது: அல்லாஹ் குர்ஆனில் நமக்குக் கற்பிக்கிறான், "நன்மை செய், கருணை காட்டு, நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்”  [41:34]

★ மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் இரக்கத்துடனும் கருணையுடனும் இருப்பது: இரக்கம் (ரஹ்மத்) என்பது ஒரு முக்கிய தெய்வீகப் பண்பாகும், இதனை கடைபிடிப்பது விசுவாசி களுக்கு முதன்மையான தார்மீகக் கடமையாகும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:  “தாய் தந்தை யர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக் கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங் கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.” [4:36]

★ நீங்கள் விரும்பும் பொருட்களை மற்றவர் களுடன் பகிர்ந்துகொள்ளுதல்: எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்” {3:92}

★ சாந்தி சமாதானத்தைப் பரப்புதல்: அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அஸ்-ஸலாம் (சமாதானம் மற்றும் பாதுகாப்பு) என்பது உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் திருப் பெயர்களில் ஒன்றாகும்; அதனை அல்லாஹ் பூமியில் (தனது அடியார்களுக்கு ஒரு நடைமுறை யாகவும், அடையாளமாகவும்) வைத்துள்ளான். ஆகவே, உங்களுக்கிடையே ஸலாத்தைப் பரப்புங் கள்.”." [அல்-அதப் அல்-முஃபரத், 989]

★ பயனுள்ள அறிவைப் பகிர்வது: இது இஸ்லாத்தில் ஒரு உன்னதமான செயலாகும், இது ஒருவர் மரணமடைந்த பின்னரும் ஸதக்கா ஜாரியாவை (தொடர்ச்சியான நன்மைகளை) பெற்றுத் தருகிறது. மற்றவர்களின் தீனை (நம்பிக்கையை) அல்லது உலக வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பயனுள்ள ஒன்றைக் கற்பிப்பது அல்லது பகிர்ந்துகொள்வது.

அபூ உமாமா அல்-பாஹிலீ (ரழி) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் குறித்துக் கூறப்பட்டது. அவர்களில் ஒருவர் ஓர் வணக்கசாலி, மற்றவர் ஓர் அறிஞர். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: 'ஓர் வணக்கசாலியை விட ஓர் அறிஞரின் மேன்மை, உங்களில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளவரை விட எனது மேன்மையைப் போன்றதாகும்.' பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ், அவனுடைய வானவர்கள், வானங்கள் மற்றும் பூமிகளில் வசிப்பவர்கள் - அதன் புற்றிலுள்ள எறும்பு கூட, மீன் கூட - மக்களுக்கு நன்மையைக் கற்பிப்பவர் மீது ஸலவாத் கூறுகின்றனர்.'. [ஜாமிஉத் திர்மிதீ, 2685]

★ ஏழைகளுக்கும், பசியால் வாடுவோருக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உணவும் பானமும் வழங்குவது: பின்வரும் குர்ஆனிய வார்த்தைகள் இந்தச் செயலை வலியுறுத்துகின்றன: “அல்லாஹ்வின் நல்லடியார்கள் இறைவன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக் கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். “உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப் பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபல னையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்). எங்கள் இறைவனிட மிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டி விடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்” (என்றும் கூறுவர்). எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான். (76:8-11).

ஆயினும், அவன் (மனிதன்) கணவாயைக் கடக்கவில்லை. (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும். (அது) ஓர் அடிமையை விடுவித்தல்- அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும். உறவினனான ஓர் அநாதைக்கோ, அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்). பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும். அத்தகையவர் தாம்  (அல்லாஹ்வின்) வலப்புறத்தில் இருப்பவர்கள். (90”11 – 18)

★ ஜனாஸாக்களில் கலந்துகொண்டு ஜனாஸா தொழுகை யை நிறைவேற்றுவது: அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் ஜனாஸாவில் (நிகழ்வுகளில்) கலந்துகொண்டு, அதற்காகத் தொழுகை நிறைவேற்றும் வரை இருக்கிறாரோ, அவருக்கு ஒரு கீராத் (நற்கூலி) உண்டு. மேலும் யார் அது அடக்கம் செய்யப்படும் வரை இருக்கிறாரோ, அவருக்கு இரண்டு கீராத்துகள் (நற்கூலிகள்) உண்டு." (நபி (ஸல்) அவர்களிடம்) "இரண்டு கீராத்துகள் என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "இரண்டு பெரும் மலைகளைப் போன்றவை" என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, 1325)

★ உறவுப் பிணைப்புகளைப் பேணுவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், "யார் தன் இறைவனின் மீது தக்வா கொண்டு, உறவுப் பிணைப்புகளைப் பேணுகிறாரோ, அவருடைய ஆயுட்காலம் நீட்டிக்கப்படும், அவருடைய செல்வம் பெருகும், மேலும் அவருடைய குடும்பத்தினர் அவரை நேசிப்பார்கள்." [அல்-அதாப் அல்-முஃப்ராத் 59- ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது]

 ★ புன்னகைப்பது: அபூ தர் (ரலி) அவர்கள் அறி வித் தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எந்தவொரு நற்செயலையும் சிறுமைப்படுத்தா தீர்கள், உங்கள் சகோதரனை மகிழ்ச்சியான முகத்துடன் சந்திப்பது கூட.” [ஸஹீஹ் முஸ்லிம், 2626 - ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப் பட்டுள்ளது]

★ தேவையுள்ளவர்களுக்கு உதவுவது: வசதியற்ற வர்கள், அனாதைகள், அண்டை வீட்டார், குடும்ப உறுப்பினர்கள் அல்லது அந்நியர்களின் அன்றாடத் தேவைகளுக்கும் சுமைகளுக்கும் உதவுவது இறை உதவியையும், பெரும் வெகுமதியையும் பெற்றுத் தரும்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஓர் இறைநம்பிக்கையாளருடைய (முஃமினுடைய) இவ்வுலகத் துன்பங்களில் ஒன்றை எவர் நீக்குகிறாரோ, அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களில் ஒன்றை அவரை விட்டும் நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமின் (குறைகளை) மறைக்கிறாரோ, அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் அவரை (அவருடைய குறைகளை) மறைப்பான். மேலும், நெருக்கடியில் இருப்பவருக்கு (குறிப்பாக, கடன் சுமையால் சிரமப்படுபவருக்கு) எவர் இலகுவாக்குகிறாரோ, அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் அவருக்கு இலகுவாக்குவான். ஓர் அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் தன் அடியானுக்கு உதவி செய்வான். [சுனன் இப்னுமாஜா, 225]

★ நோயாளியைச் சந்திப்பது: அலி (ரழி) அவர் கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: "எந்த வொரு முஸ்லிமும் காலையில் மற்றொரு (நோயுற்ற) முஸ்லிமை நலம் விசாரிக்கச் சென்றால், மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் வானவர்கள் ஸலவாத் கூறுகி றார்கள். அவர் மாலையில் சென்று நலம் விசாரித்தால், காலை வரை அவருக்காக எழுபதா யிரம் வானவர்கள் ஸலவாத் கூறுகிறார்கள். மேலும், அவருக்காக சொர்க்கத்தில் ஒரு கனித்தோட்டம் இருக்கும்."  [ஜாமிஉத் திர்மிதீ, 969].

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “உங்கள் சக்திக்குட்பட்ட (நற்)செயல்களையே செய்யுங் கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் சோர்வடையாத வரை அல்லாஹ் (உங்களுக்கு நற்கூலி வழங்குவதில்) சோர்வடைவதில்லை" என்று கூறினார்கள். மேலும், (மார்க்கச்) செயல்களில், அதைச் செய்பவர் தொடர்ந்து நிலைத்திருக்கும் செயலே இறைவனுக்கு மிக விருப்பமானதாக இருந்தது. [ஸஹீஹுல் புகாரி, 43; Muslim, 782a)

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இருண்ட இரவின் துண்டுகளைப் போன்ற சோதனைகள் வருவதற்கு முன்பே நற்செயல்களைச் செய்ய விரையுங்கள். அப்போது ஒருவன் காலையில் முஃமினாகவும், மாலையில் காஃபிராகவும் இருப்பான்; அல்லது மாலையில் முஃமினாகவும், காலையில் காஃபிராகவும் இருந்து, உலக ஆதாயத்திற்காகத் தனது மார்க்கப் பற்றை விற்றுவிடுவான்.” (முஸ்லிம், 118 - ஆங்கிலத்தி லிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது)

அபூ தர் (ரழி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: 'நீர் எங்கிருந்தாலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள் (அவனைப் பயந்துகொள்). ஒரு தீமைக்குப் பிறகு ஒரு நன்மையைச் செய், அது அதை அழித்துவிடும் (மறைத்துவிடும்). மேலும், மக்களிடம் நற்குணத்துடன் நடந்துகொள் (அவர்களுடன் நல்ல முறையில் பழகு)’ [ஜாமிஉத் திர்மிதீ, 987]

அல்லாஹ்வின் அருளையும் திருப்தியையும் பெற்று, சுவர்க்கத்தில் நல்லோர்களில் ஒருவராக நாம் அனைவரும் ஆவதற்கு அல்லாஹுதாலா நமக்கு அருள் புரிவானாக! ஆமீன்! 

الحمدلله


No comments:

Post a Comment

  குர்ஆன் போதிக்கும் நன்னடத்தை عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 4:86. உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழு...