Sunday, February 1, 2026

 

4. குர்ஆன் & ஹதீஸ்:  இரவில் குர்ஆன் ஓதுதல்:  


السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

குர்ஆன் கூறுகிறது:

வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர்  இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். (3:113)

நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்கள் அல்லது அதில் பாதியோ அல்லது மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்;

இரவையும் பகலையும்  நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதால்  உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; (73:20 இருந்து)

ஹதீஸ்கள்:

ஸாலிம் பின்அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்  நபி (ஸல்)  கூறியதாக அறிவித்தார்கள்: "இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது:1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனை வழங்கியுள் ளான்; அவர் அதை இரவு மற்றும் பகலில்  ஓதி வருகிறார். 2. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியுள்ளான்; அவர் அதை இரவு மற்றும் பகலில் (அல்லாஹ்வின் பாதையில்) செலவிட்டு வருகிறார்."[ஸஹீஹ் புகாரி : 7529]

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்-ஆஸ் அறிவித்துள்ளார் : ஒருவர் இரவில் பத்து வசனங் களைத் தொடர்ந்து ஓதித் தொழுதால், அவர் அலட்சியமானவர்களில் பதிவு செய்யப்பட மாட்டார்; ஒருவர் இரவில் தொழுது நூறு வசனங்களை ஓதினால், அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவர்களில் பதிவு செய்யப்படுவார்; ஒருவர் இரவில் ஆயிரம் வசனங்களை ஓதித் தொழுதால், அவர் மிகப்பெரிய வெகுமதிகளைப் பெறுபவர்களில் பதிவு செய்யப்படுவார். [சுனன் அபி தாவூத் 1398] [ஸஹீஹ் அல்-தர்கீப் வல்-தர்ஹீப், 640.]

நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக உமர் பின் கத்தாப் (ரலி) கூறினார்கள்: எவரேனும் ஒருவர் (இரவில்)  குர்ஆனை ஓதாமல் உறங்கிவிட்டால், அதை அவர் ஃபஜ்ர் மற்றும்  லுஹர் தொழுகை களுக்கும இடையில் ஓதினால்அதை இரவில் ஓதியதைப் போலவே அவருக்காகப் பதிவு செய்யப்படும். [ஸஹீஹ் முஸ்லிம் : 747]

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒருவர்  இரவில் குர்ஆனை ஓதுவதைக் கேட்டு கூறினார்கள், "அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக! ஏனெனில் அவர் இன்னின்ன சூராக்களின் இன்னின்ன வசனங்களை எனக்கு நினைவூட்டினார், அவற்றை நான் மறக்கடிக்கப்பட்டிருந்தேன்.[ஸஹீஹுல் புகாரி : 5038]

الحمدلله

No comments:

Post a Comment

  5. குர்ஆன் & ஹதீஸ் :   குர்ஆனை வாசிக்கும் போது ஸஜ்தா செய்தல்:   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...