10. குர்ஆன் & ஹதீஸ்: சூரா அல்- பகரா பற்றிய ஹதீஸ்கள்:
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
அபூ மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவரேனும் ஒருவர் அல்-பகரா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதினால், அவை அவருக்குப் போதுமானதாக அமையும் (அதாவது, அந்த இரவில் ஷைத்தானின் தீங்குகளில் இருந்தும், அனைத்து விதமான தீமைகளில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும்; அல்லது இரவுத் தொழுகைக்குப் போதுமானதாக அமையும்; அல்லது வேறு எந்த திக்ரையும் ஓதத் தேவையில்லாத அளவுக்குப் போதுமானதாக அமையும்)." [ஸஹீஹ் அல் புகாரி : 5009]
அபுல்-அஹ்வாஸிடமிருந்து அப்துல்லாஹ் அவர்கள் கேட்டதாக கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், " உங்கள் வீடுகளில் சூரா அல்-பகராவை ஓதுங்கள், நிச்சயமாக ஷைத்தான் சூரா அல்-பகரா ஓதப்படும் வீட்டில் நுழைய மாட்டான்.’ என கூறினார்கள்: [ஷைஹ் அல்-அல்பானி எண் 1521 இன் சில்சிலா அஹதீத் அஸ்-சஹீஹா]
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளைக் கல்லறைகளாக ஆக்காதீர்கள் (அதாவது, தொழுகை, குர்ஆன் ஓதுதல் போன்ற வணக்கங்கள் இல்லாத வெற்று இடங்களாக ஆக்காதீர்கள்). சூரா அல்-பகரா ஓதப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் ஓடிவிடுகிறான் (அதன் அருளாலும் பாதுகாப்பா லும்).[ஸஹீஹ் முஸ்லிம் : 780]
அன்-நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு (பதிவேட்டில்) எழுதினான். அதிலிருந்து இரண்டு வசனங்களை இறக்கினான், அவற்றைக் கொண்டு சூரத்துல் பகராவை நிறைவு செய்தான். அவை ஒரு வீட்டில் மூன்று இரவுகளுக்கு ஓதப்பட்டால், ஷைத்தான் அதை நெருங்க மாட்டான் (அதாவது, அந்த வீட்டிற்குள் நுழையவோ, அதன் மக்களுக்குத் தீங்கு செய்யவோ மாட்டான்)." [ஜாமிஉத் திர்மிதீ : 2882]
அபூ உமாமா அல்-பாஹிலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்: 'அல்-பகரா' அத்தியாயத் தை ஓதுங்கள். நிச்சயமாக அதை (ஓதுவது, மனனம் செய்வது, அதன்படி செயல்படுவது போன்ற) கடைப்பிடிப்பது பாக்கியமாகும்; அதைக் கைவிடுவது கைசேதமாகும். மேலும், சூனியக்காரர்களால் அதை வெல்ல முடியாது." [ஸஹீஹ் முஸ்லிம் : 804]
உஸைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அவர்கள் ஓர் இரவில் ‘அல்பகரா’ அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தபோது, அவர்களது குதிரை அவர்களுக்கு அருகில் கட்டப்பட்டிருந்தது. அப்போது அக்குதிரை மிரண்டு குதித்தது. அவர்கள் (ஓதுவதை) நிறுத்தியபோது, குதிரை அமைதியானது. மீண்டும் அவர்கள் ஓதினார்கள்; குதிரை மிரண்டது. அவர்கள் (ஓதுவதை) நிறுத்தினார்கள்; குதிரையும் அமைதியானது. பிறகு அவர்கள் ஓதினார்கள்; குதிரை மிரண்டது. எனவே, அவர்கள் (ஓதுவதிலிருந்து) விலகினார்கள் (நிறுத்தினார்கள்). அவர்களது மகன் யஹ்யா குதிரைக்கு அருகில் இருந்தார். அக்குதிரை அவரைத் தாக்கிவிடுமோ (மிதித்துவிடுமோ) என்று அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் அந்தச் சிறுவனை (பாதுகாப்பாகத் தம்மிடம்) இழுத்துக்கொண்டபோது, வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள். அது (அவர்கள் கண்ட ஒளி) அவர்களுக்குத் தெரியாதவாறு (மேலே சென்று) மறைந்துவிட்டது. விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இப்னு ஹுளைரே! நீங்கள் (தொடர்ந்து) ஓதியிருக்க வேண்டும்! இப்னு ஹுளைரே! நீங்கள் (தொடர்ந்து) ஓதியிருக்க வேண்டும்!" என்று கூறினார்கள். அதற்கு உஸைத் (ரழி), "அல்லாஹ்வின் தூதரே! என் மகன் யஹ்யா குதிரைக்கு அருகில் இருந்தான். அது அவனை மிதித்துவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே நான் என் தலையை உயர்த்தி, அவன் பக்கம் திரும்பினேன். பிறகு நான் வானத்தை அண்ணாந்து பார்த்தேன். அங்கே நிழல் தரும் மேகம் போன்ற ஒன்றைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்றவையும் இருந்தன. நான் அதைப் பார்க்க முடியாதவாறு அது (மேலே) சென்று மறைந்துவிட்டது" என்று கூறினார்கள். (நபி (ஸல்) அவர்கள்) "அது என்னவென்று உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். இவர் "இல்லை" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவை மலக்குகள் (வானவர்கள்); உமது ஓசையைக் கேட்டு நெருங்கி வந்துள்ளன. நீர் தொடர்ந்து ஓதியிருந்தால் விடிந்த பிறகும் மக்கள் அவற்றைப் பார்த்திருப்பார்கள்; அவை மக்களிடமிருந்து மறைந்திருக்காது" என்று கூறினார்கள். [ஸஹீஹுல் புகாரி : 5018]
الحمدلله
No comments:
Post a Comment