30. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
30. "கூறுவீராக, என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! இந்த துவாவை பிரார்த்திக்கும் படி அல்லாஹ் நபி ﷺ மிடம் எப்போது கேட்டுக் கொண்டான்?
பதில்: ஹிஜ்ரத் செல்வதற்கு மக்காவை விட்டு வெளியேறுவதற்கு முன்.
பத்து வருடங்களாக இஸ்லாத்தை மக்காவில் உபதேசித்தார் நபி ﷺ அவர்கள். சிலைகளை வணங்கிய குறைக்ஷிகள் நபி ﷺ அவர்களையும் முஸ்லிம்களையும் பல வழிகளில் துன்புறுத்தினார்கள். அவர்களின் துன்புறுத்தலை தாங்க முடியாமல் சில முஸ்லிம்கள் அபிசீனியாவிற்கு புலம் பெயர்ந்தார்கள். நபி ﷺ அவர்கள் அச்சமயத்தில் அடிக்கடி ஒரு கனவு கண்டார்கள். அபு மூஸா (ரஜி) நபி ﷺ அவர்கள் கூறியதாக பதிவு செய்துள்ளார்: "மக்காவை விட்டு பேரீச்ச மரங்கள் நிரம்பிய ஒரு இடத்திற்கு புலம் பெயர்வதைப் போல் நான் என் கனவில் கண்டேன்.
நான் அது அல்-யமாமா அல்லது ஹாஜர் என்று
இருக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது யத்ரிப் எனும் மதீனாவாக இருக்கும் என்று
நினைக்கவில்லை." (அல்- புகாரி மற்றும் முஸ்லிம்).
அல்- புகாரியின் மற்றுமொரு ஹதீஸில் ஆயிஷா (ரஜி) கூறுகிறார்: "பேரீச்ச மரங்கள் நிரம்பிய, இரண்டு எரிமலைகள், மற்றும் கருப்பு நிறக்கற்களால் ஆன இரண்டு பாதைகளுக்கிடையில் ஒரு இடம் எனக்கு கனவில் காட்டப்பட்டது"
மக்கத்து குறைஷிகள் இறை தூதரை ﷺ கொல்ல பெரிய திட்டமிட்டனர். வானவர் ஜிப்ரீல் (அலை) நபி ﷺ அவர்களிடம், "அல்லாஹ் உம்மை மதீனாவிற்கு புலம் பெயர அனுமதியளித்து விட்டார். இன்று நீர் உம் வீட்டில் தங்க வேண்டாம். குறைஷிகள் உம்மை கொல்ல திட்டமிட்டுள்ளனர்." என்று அறிவித்தார். அன்று இரவு குறைஷி குழுவினர் நபி ﷺ அவர்களின் வீட்டை சூழ்ந்து, அவர் வெளியே வரும் போது அவரை எல்லாரும் சேர்ந்து அவர் மேல் பாய்ந்து கொன்று விடலாம் என நின்ற போது, நபி ﷺ அவர்கள் ஒரு பிடி மண்ணை எடுத்து சூரா யாஸீனின் ஆரம்ப வசனங்களை ஓதி அவர்கள் இருக்கும் திசையை நோக்கி எறிய அல்லாஹ் அவர்களின் கண்ணில் திரையிட அவர் தன் வீட்டை விட்டு எளிதாக வெளியேறினார்.
நபி ﷺ அவர்களும் தோழர் அபு பக்ர் (ரஜி) அவர்களும் முன்னே திட்டமிட்டபடி தவ்ர் மலையை நோக்கி இரண்டு ஒட்டகங்களில் பயணித்தனர். அபு பக்ர் (ரஜி) அவர்களின் மகனும் உடன் சென்றார். அபு பக்ர் (ரஜி) அவர்களின் மகள் அஸ்மா (ரஜி) பயணத்திற்கு வேண்டிய பொருட்களை தயாரித்து அனுப்பினார்.
அதிகாலையில் குறைஷி குழுவினர் நபி ﷺ அவர்கள் வெளியே வராததால், அவர் வீட்டினுள் நுழைய, அங்கு அலி (ரஜி) நபி ﷺ அவர்களின் கட்டிலில் தூங்குவதை கண்டு, மக்காவின் நாலா பக்கங்களிலும் தேடத் தொடங்கினர். முஹம்மதை உயிரோடோ அல்லது உயிரற்ற நிலையில் கொண்டு வருபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசளிப்பதாக அறிவித்தனர். மூன்றாவது நாள் ஒரு கை தேர்ந்த தேடும் குழுவை அமைத்து தவ்ர் மலையில் தேடும் பணியை தொடர்ந்தனர். இருவர், நபி ﷺ அவர்களும் அவர் தோழர் அவர்களும் தங்கியிருந்த குகைக்கு முன்னர் வந்தும் ஏதும் தென்படும் திரும்பி சென்றனர்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர் ﷺ) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன். (9:40).
அபாயகரமான இந்த மதீனா பயணம் பல அதிசய நிகழ்வுகள் கொண்டதாக அமைந்தது. எல்லாம் வல்ல அல்லாஹ் சுபாஹனஹீதாலா அவரை மக்காவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி, அவருடைய ஹிஜ்ரா பயணத்தை எளிதாக்கினான். அது போலவே மிக்க மரியாதையுடனும், அன்புடனும், சாந்தியுடனும், சந்தோக்ஷத்துடனும் மதீனாவில் நுழையச் செய்தான்.
சில வருடங்களுக்குப் பின்னர் மக்காவை எதிர்ப்பின்றி, இரத்தமின்றி, போரின்றி நபி ﷺ வெற்றிகொண்டது, அல்லாஹீதாலாவின் வலிமையால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.