திருக்குர்ஆனில் “சபிக்கப்பட்ட
மரம்” மற்றும் “தடைசெய்யப்பட்ட மரம்”
என எதை
குறிப்பிட்டுள்ளது?
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்: சபிக்கப்பட்ட மரம், நரகத்தில் இருக்கும் ஜக்கூம்
மரம். மற்றொன்று சொர்க்கத்தில் தடைசெய்யப்பட்ட மரம்.
ஜக்கூம் மரம்:
ஜக்கூம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல; அது மறுமையின் தண்டனைக்கான சின்னமாகும்.
மனிதன் செய்த தீய செயல்களின் விளைவுகளை குறிக்கும் சின்னமாகும்.
இது திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்களில்
குறிப்பிடப் பட்டுள்ளது:
ஆயத், 17:60: (நபியே!)
நிச்சயமாக உம்முடைய இறைவன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று
உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக! மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய
காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும் மனிதர்களுக்கு
சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால், இது அவர்களுடைய பெரும்
அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது.
ஆயத் 37:62-67: (நரகத்திலிருக்கும்
கள்ளி) “ஜக்கூம்” என்ற மரத்தை நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே
செய்திருக்கிறோம். மெய்யாகவே அது நரகத்தின்
அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும். அதன் பாளைகள்
ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும். நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை
நிரப்பிக் கொள்வார்கள். பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.
ஆயத், 44:43 முதல் 46 வரை: நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே). பாவிகளுக்குரிய
உணவு; அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும். வெந்நீர்
கொதிப்பதைப் போல்.
ஆயத், 56:51-53: “பொய்யர்களாகிய
வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள், ஜக்கூம்
(என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள். ஆகவே, “அதைக் கொண்டே வயிறுகளை நிறப்புவீர்கள்.”
இப்னு அப்பாஸ் கூறியதாக அல்-புகாரி
பதிவு
செய்துள்ளார்:
அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் தான்
சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்ததாகவும்,
ஜக்கூம்
மரத்தைப் பார்த்ததாகவும் கூறியபோது,
அவர்கள்
அதை நம்பவில்லை, அல்லாஹ்வின்
சாபத்திற்கு ஆளான அபூ ஜஹ்ல், "எனக்கு
கொஞ்சம் பேரீச்சம்பழம் மற்றும் வெண்ணெய் கொண்டு வாருங்கள்" என்று கூறினார், அவன் அவற்றைச் சாப்பிட்டு, "இதைத் தவிர வேறு எந்த ஜக்கூமும்
எனக்குத் தெரியாது. இதை இப்னு அப்பாஸ்,
மஸ்ரூக், அபு மாலிக், அல் ஹசன் அல்-பஸ்ரி மற்றும் பலர்
விவரித்தனர்.
அல்லாஹ் அறிவுறுத்தும் இந்த
எச்சரிக்கைகளுக்கு பயப்படுவதற்குப் பதிலாக,
இவை
தீயவர்களை - வழிகேடு, அடக்குமுறை
மற்றும் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதையே அதிகரிக்கிறது.
சொர்க்கத்தில் தடைசெய்யப்பட்ட மரம்:
சொர்க்கத்தில் தடைசெய்யப்பட்ட மரம்
குர்ஆனில் சபிக்கப்பட்ட மரம் என்று நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. இந்த மரம்
ஆதாம் (அலை) மற்றும் அவரது மனைவிக்கு அல்லாஹுதாலா கொடுத்த ஒரு சோதனையாகும்.
அல்லாஹுதாலா சொர்க்கத்தில் ஆதம் (அலை)
அவர்களிடமும், அவரது
மனைவியிடமும், "
“ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள்
இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை
மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச்
செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்”
என்று கூறினான். (2:35)
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்)
குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான்
அறிவித்துத் தரவா?” என்று
கேட்டான். [20:120]. எனினும்
அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு
வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை)
ஊசலாடச் செய்தான்; (அவர்களை
நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள்
இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள்,
அல்லது
(இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள்
இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.
[7:20].
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி)
அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்;
உடனே
அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின;
ஆகவே
அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக்
கொள்ளலானார்கள்; இவ்வாறு
ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து,
அதனால்
வழி பிசகி விட்டார். [20:121]
ஷைத்தான் அவர்களை அதிலிருந்து நழுவச்
செய்து, அவர்கள் இருந்த அந்த [நிலையிலிருந்து]
அவர்களை நீக்கிவிட்டார். [2:36].
பின்னர் அவரது இறைவன் அவரைத்
தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான். [20:122].
ا
الحمدلله