Friday, November 18, 2022

 

38.   ………………...   தன்  மகனுக்கு உபதேசம் செய்தார்: ."அல்லாஹ்விற்கு இணை வைக்காதே. நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் பாவமாகும்," என்று. 

பதில்: லுக்மான்  (31:13).

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ                         

லுஃக்மான் தம் புதல்வருக்கு; "என் அருமை மகனே!  நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்," என்று நல்லுபதேசம் செய்து கூறியதை நினைவு  படுத்துவீராக. (31:13). “நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்” (31:14).

ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்” (31:15)

இன்னும் (லுஃக்மான் தம் புதல்வரிடம்), என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.” "என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக!  நன்மையை ஏவி,  தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக!  உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக!  நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். "(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (31: 15 to 18) "உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களில் எல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.” (31:19).

 

இஸ்லாத்தின்படி அல்லாஹ்விற்கு இணை வைப்பது பெரும் பாவம் . இதை அல்லாஹ் முதல் கட்டளையாக கூறுகின்றான். இதை  குர்ஆனில் பல இடங்களில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றான்.

 

• “அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்.” - (3:64 4:36, 6:151, 18:110, 30:31)

• “மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.”. - (72:18)

•"…. நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன், ஒரே நாயன்தான்

• "என்னையே நீங்கள் அஞ்சங்கள்." (16:51)

• “இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். " (30:31).

• “அல்லாஹ் - (ஒருவனையே) வணங்க வேண்டும்; அவனுக்கு (எதனையும், எவரையும்) இணைவைக்கக் கூடாது என்பது தான்; நான் (உங்களை) அவன் பக்கமே அழைக்கின்றேன்; அவன் பாலே (என்) மீட்சியும் இருக்கிறது” - (13:36).

•" .. பின்னர் அவன் உங்களிடமிருந்து அத்துன்பத்தை நீக்கிவிட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கே இணை வைக்கின்றனர்! (விரைவிலேயே உங்கள் தவற்றை) அறிந்து கொள்வீர்கள். " - (16: 54 and 55).

• “நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (4:116),

• "நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன? அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக- (46:4)

• "என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (நாயன் என) அழைப்பதற்கு சிறிதும் தகுதியில்லாதது. மேலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்விடமே திரும்பச் செல்வோம்.” (40:43)

• “அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி (த்து அழை) க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. “(35:13).

• “வானங்களிலோ பூமியிலோ இவர்களுக்காக எந்த உணவையும் கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும் (அதற்கு) சக்திபெறாத வைகளையும் அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் வணங்குகிறார்கள்” - (16:73).

• “நீங்கள் அவர்களைப் பிரார்த்தி (த்து அழை) த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.” - (35:14)

• “இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து, பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்-“ (22:31).

•"அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்." - (6:88)

• “நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்”. - (39:65).

•"எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும். அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிபவர் எவருமில்லை. " - (5:72)

• "அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர். - (17:39)

• “அவன் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஏற்படுத்தினான். ஆகவே நீங்களிருவரும் (வானவர்கள்) இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்” (என்றுங் கூறப்படும்). " - (50:26)

• “கியாம நாள் வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்?  தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர்” - (46:5 and 6)

• “இன்னும், இணை வைத்தவர்கள் தாங்கள் இணைவைத்தவர்களை (மறுமை நாளில்) பார்த்தார்களாயின் “எங்கள் இறைவனே! நாங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்தான். உன்னையன்றி நாங்கள் இவர்களைத் தான் அழைத்துக் கொண்டிருந்தோம்” என்று அவர்கள் கூறுவார்கள்; அதற்கு (அந்தத் தெய்வங்கள், “நாங்கள் தெய்வங்களல்ல) நிச்சயமாக, நீங்கள் பொய்யர்களே” என்னும் சொல்லை அவர்கள் மீது வீசும்.” - (16:86)

• " (இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி: “நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்” என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையே இருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணை வைக்கப்பட்டவைகள்” நீங்கள் எங்களை வணங்கவேயில்லை” என்று கூறிவிடும்!” - (10:28 and 29)

•"நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே தான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்” (41:6).

                                                                                                  

உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக; (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம், என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும். (7:172). 

இயாத் பின் இமார் நபி (ﷺ) அவர்கள் கூறியதாக குறிப்பிடுகிறார்: “நான் என் அடிமையை ஒரே இறைவனை வணங்குவதற்காக படைத்தேன். ஆனால் ஷைத்தான்கள் அவர்களிடம் வந்து அவர்களை தங்கள் மார்க்கத்தை விட்டு பிறழச்செய்தனர். நான் ஆகுமாக்கியதை அவர்கள்  தடுத்து விட்டன"

நபி  (ﷺ)  கூறியதாக, அனாஸ் பின் மாலிக் குறிப்பிட்டதாக, இமாம் அஹமத் பதிவு செய்துள்ளார். " உலகில் உள்ள எல்லாவற்றையும் பரிகாரமாக கொடுக்க ஆசைபடுகிறாயா?” என்று  கியாமத் நாளில் நரகவாசிகளிடம் கேட்க, அவனும் "ஆம்!" என்று கூற, அதற்கு அல்லாஹ்,  "நீ ஆதமுடைய அடிவயிற்றிலிருந்து வந்த போதே நான் உனக்கு கூறவில்லையா? எனக்கு இணை வைக்காதீர்கள் என்று, ஆனால் நீயோ எனக்கு இணை வைத்து  அவைகளை வணங்கினாய்"  என்று கூறினான். இதை இரண்டு ஸஹீஹ்க்களும் பதிவு செய்துள்ளன.

பிரார்த்தனை:  ஓ அல்லாஹ்!  தெரிந்து  நான் செய்த இணைவைப்புகளிலிருந்து என்னை காப்பாற்ற உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்!  நான் அதை தெரிந்து வைத்திறாததற்கு உன்னிடம் மன்னிப்பு கோருகின்றேன்

                                     الحمدلله                                   

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...