Saturday, October 5, 2024

 

5. உங்களுக்கு தெரியுமா அல்லாஹீதாலா திருக்குர்ஆனில், எத்தனை உயிர்த்தெழும் சம்பவங்களை மேற்கோளாக காட்டியுள்ளார் என்று?

 السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அல்லாஹ் சுபஹானஹீதாலா அனுப்பிய எல்லா நபிமார்களின் சமுதாயங்களும் அவர்களின் நபியை பார்த்து கேட்ட கேள்வி: “நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (23:62, 37:16, 56:47) என்பது தான். அதற்கு அல்லாஹ் சுபஹானஹீதாலா (கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான். [22:7]. நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை; மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்?” [4:87] என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் ஆணித்தரமாக கூறியுள்ளான்.

உயிர்தெழுதலைப் பற்றி  திருக்குர்ஆனில் நிறைய வசனங்கள் இருந்தாலும், அல்லாஹீதாலா, மனித வரலாற்றில்  நடந்த சில உயிர்தெழுந்த சம்பவங்களை உதாரணமாக குறிப்பிட்டுள்ளான். அவை:

1. இப்ராஹீம் (அலை) அல்லாஹீதாலாவிடம் உயிர்த்தெழுதலை காண்பிக்கச் சொன்னார்:

இப்ராஹீம் (அலை) தன் இறைவனிடம் “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அல்லாஹ் கேட்டான்: “நீர் (இதை) நம்ப வில்லையா?” 

இப்ராஹீம் (அலை): “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார்.

அல்லாஹ் கூறினான்: “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர் (அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று. (2:260),

இப்னு காதிரின் விளக்கம்: இப்ராஹீம் (அலை) நான்கு பறவைகளை தன் கூப்பிட்ட குரலுக்கு தன்னிடம் வருமாறு பழக்கினார். பின் அவற்றின் இறகுகளை நீக்கி அதனை பல பாகங்களாக வெட்டி, வெவ்வேறு பறவைகளின் பாகங்ளை  சேர்த்து, நான்கு/ஏழு பிரிவிகளாக்கி ஒவ்வொரு குன்றின் மீதும் அவற்றை வைத்தார். இப்னு அப்பாஸ் கூறினார்: "இப்ராஹீம் (அலை) அப்பறவைகளின் தலையை தன் கையில் வைத்துக் கொண்டார். அவற்றை அழைக்கும் படி அல்லாஹ், இப்ராஹீம் (அலை) மிற்கு கட்டளையிட்டார். அல்லாஹ்வின் கட்டளைக் கிணங்க, அவர் அவற்றை அழைத்தார். அப்படி அழைத்தவுடன் அபபறவை களின் இறகுகள், இரத்தம், அதன் எலும்புகளுடன் கூடிய மாமிச துண்டுகள் பறந்து வந்து அதன் அதனுடைய உடம்புகளோடு ஒன்று சேர்ந்து இப்ராஹீம் (அலை) முன் வந்து நின்றது ஈர்க்கக் கூடிய காட்சியாகவும், இறந்த அவை உயிர் பெற்று எழுந்ததற்கு சாட்சியாகவும் இருந்தது. ஒவ்வொரு பறவையும் தன் தலையை இப்ராஹீம் (அலை) மின் கைகளிலிருந்து பெற்றுக் கொண்டது. அவர் வேறு பறவையின் தலையை தந்த போது அதனை ஏற்க மறுத்தது. அவர் அதன் தலையை கொடுத்தவுடன் அதனுடைய உடம்போடு இணைந்து அல்லாஹ்வின் ஆற்றலால் உயிர் பெற்றது."

2. அல்லாஹீதாலா கொன்றவன் யார் என கண்டறிய, கொலையுண்ட வனை உயிர்த்தெழச் செய்தார்:

நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்). [2:72]

மூஸா (அலை) காலத்தில் பனி இஸ்ராயிலின் குலத்தவரில் ஒரு பெரிய பணக்காரர் கொல்லப்பட்டதை கண்டு, அவர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டும், தர்க்கித்துக் கொண்டும் சண்டையிட்டனர். பின் மூஸா (அலை) மிடம் சென்று, இதைப் பற்றி கூறி, அவரிடம் உண்மையான கொலயாளி யார் என்று கண்டறியுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களும் அவ்வாறே மூஸா (அலை) மிடம்  சென்று நடந்ததை எல்லாம் கூறி அவருடைய இறைவனிடம் கேட்டு அறிவிக்க கோரினர்.

இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்: “மூஸா (அலை)  தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்றார். அப்போது அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார். (2:67).

மூஸா (அலை) முடைய காலத்து இஸ்ராயிலின் சந்ததிகள் மிகவும் பிடிவாதக்காரர்கள்,  எளிதாக கீழ்படிய மாட்டார்கள், எப்போதும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் அவர்களுடைய  நபி மீது அவநம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்தார்கள்.  “அந்த பசு எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா [அலை]) கூறினார். (2:68). அவர்கள் உடனேயே  அல்லாஹ்வின் அந்த கட்டளையை நிறைவேற்றி இருந்தார்களானால் காரியம் எளிதாக முடிந்திருக்கும்.

ஆனால் அவர்களோ, “அதன் நிறம் யாது!” என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!”  கூறினார்கள்;  “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார்.(2:69). அவர்கள் மேலும் கூறினார்கள், “உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப் பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன; அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்று அவர்கள் கூறினார்கள். (2:70).

மூஸா (அலை) கூறினார்,  “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப் படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.(2:71). “(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலையுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்” என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான். [2:73].

அப்பசுவை அறுத்து அதன் ஒரு பாகத்தால் கொலயுண்ட அப்பணக்காரனின் சடலத்தில் அடிக்க, அவன் அல்லாஹ்வால் உயிர்ப்பிக்கப்பட்டு, தன்னை கொன்றவனை அடையாளம் காட்டி விட்டுமீண்டும் இறந்து போனான்.

3. அல்லாஹீதாலா எழுபது பனி இஸ்ராயீல் மக்களை மரணமடையச் செய்து பின் உயிர் கொடுத்து எழுப்பினான்:

இஸ்ராயிலின் சந்ததிகள் மூஸா (அலை) மூலமாக நிறைய அருள் வளங்களைப் பெற்றும், அவர் மீது அவர்கள் அவநம்பிக்கை கொண்டிருந்தனர். மூஸா (அலை) கூறினார்; " இந்த கற்பலகைகள் அல்லாஹ் அனுப்பிய வேதம். அதில் அல்லாஹ்வின் கட்டளைகளும், மனிதர்களுக்கு தடுக்கப்பட்வைகளும் உள்ளன." அவர்கள் கூறினார்கள்: " மூஸாவே! நீங்கள் சொல்வதால் நாங்கள் இதை நம்ப வேண்டுமா? அல்லாஹ்வின் மீது ஆணையாக இதை அல்லாஹ்வே எங்கள் முன்னிலையில் தோன்றி தன்னை காண்பித்து, 'இது நான் அருளிய வேதம்' என்று  கூறும் வரை அதை நாங்கள் நம்பமாட்டோம்.  அல்லாஹ் உங்களிடம் பேசுவது போல் எங்களிடம் ஏன் பேசுவதில்லை?" என்று கேட்டனர். அவர்கள் அல்லாஹ்வை நேரில் காண வேண்டும் என கூறிய போதே அவர்களை ஓர் இடி முழக்கம் பற்றிக் கொண்டது. (2:55). "அதனால் அவர்கள் மரணித்தார்கள்." அவர்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, அவர்கள் இறந்தபின் அவர்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.(2:56) என்று அல்லாஹீதாலா கூறுகின்றான்.

அஸ்-ஸுத்தி கூறுகிறார்:மூஸா (அலை) இஸ்ரவேலர்களை தனியே அழைத்துச் சென்று அவர்களை கொன்று விட்டீர் என கூறுவார்கள் என்ற பயத்தினால் அழுது இறைவனிடத்தில் வேண்டினார்: என்னுடைய இறைவா!  இஸ்ராயிலின் சந்ததிகளுக்கு நான் என்ன பதில் கூறுவேன். அவர்களில் சிறந்தவர்களை  நீ மரணிக்க வைத்து விட்டாய். இது உன் விருப்பமாய் இருந்திருந்தால் முதலிலே என்னையும் இவர்களையும்  அழித்திருக்கலாமே! சில அறிவீலீகள் செய்த விஷமச் செயலிற்காக எங்களை அழிக்கலாமா?" என்று. அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து அவர்களை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பினான்என்று.

அந்த எழுபது பேரும் தங்கத்தினால் ஆன  காளைக் கன்றை  வணங்கியவர்கள் என்று கூறி அவர்களை ஒருவர் பின் ஒருவராக உயிர் கொடுத்து எழுப்பினான்.

4. அல்லாஹுதாலா, மரணத்திற்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய பல ஆயிரக்கணக்கானவர்கள் மீண்டும் உயிர்த்தெழ வைத்தார்:

(நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் “இறந்து விடுங்கள்” என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. [2:243].

இப்னு அபு ஹாத்திம், இப்னு அப்பாஸ் (ரஜி) கூறியதாக விளக்குகிறார்: ஈராக்கிலுள்ள தாவர்தன் என்ற கிராமத்திலிருந்து, 4000 பேர் ப்ளேக் என்ற உயிர்கொல்லி நோயிலிருந்து தப்பிக்க அந்த இடத்திலிருந்து ஓடி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அல்லாஹ் அவர்களை "மரணம் அடையுங்கள்'' என்று கட்டளையிடவே  அவர்கள் யாவரும் ஒரே நேரத்தில் மரணமடைந்தனர். அந்த இடத்தை கடந்து சென்ற ஒரு நபி  அல்லாஹ்  سبحانه وتعالىٰ விடம் அவர்கள் உயிர்த்தெழ பிரார்த்தித்தார். இறைவனும் அவர் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அவர்களை உயிர்த்தெழச் செய்தான்.

ஸலஃப் அறிஞர்கள்அல்லாஹ் குறிப்பட்ட அம் மக்கள் இஸ்ராயிலின் சந்ததியை சேர்ந்தவர்கள் என்றும் கூறுகின்றனர். அவர்கள் ப்ளேக் நோய்க்குப் பயந்து ஒரு பள்ளத்தாக்கிற்கு ஓடி சென்று பின், வளமாக வாழ்ந்தனர். ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு அவர்களின் நன்றி கெட்ட போக்கால் அல்லாஹ் سبحانه وتعالىٰ  அவர்களிடம் இருவானவர்களை அனுப்பினான். அவர்களில் ஒருவர் மலை மேலிருந்தும் மற்றொரு வானவர் பள்ளத்தாக்கின் கீழிருந்தும் கத்த அம்மக்கள் யாவரும் மடிந்தனர். வெகு காலத்திற்குப்பின் அவ்வழியே சென்ற நபி, அல்லாஹ் سبحانه وتعالىٰ   விடம் அவர்களை உயிர்த்தெழுமாறு வேண்டினார். அவரின் வேண்டுதல்படி அல்லாஹ்வும் அவர்களின் எலும்புகளை சேகரித்து சதையாலும் தோலாலும்  போர்த்த அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.

5. அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று வியந்து கூறிய நபி உஸேர் (அலை) மை இறக்க வைத்து, பின் உயிர்த்தெழுமாறு செய்தான்:

ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார். [2:259]. 

முஜாஹித் பின் ஜாபிர் கூறுகிறார்: திருக்குர்ஆனின் 2:259 ஆயத்தில். குறிப்பிடப்பட்டவர் நபி உஜைர். நபி உஜைர் பனி இஸ்ராயில் இனத்தவர்.  அந்த கிராமம் இப்போதைய ஜெருசலம். நெபுசாத்நெஜ்ஜர் என்ற கொடுங்கோல் அரசன் அங்குள்ளவர்களை கொன்று அந்த ஊரை அழித்துவிட்டான். "(அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார். ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான். பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்தான்." உஜைரின் இயற்கையான மரணத்திற்கு பின், அந்த இடம் எழுபது ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிதாக கட்டப்பட்டு அதில் மக்கள் குடியேற ஆரம்பித்தார்கள். பனி இஸ்ராயில் இனத்தவரும் மீண்டும் அவ்வூருக்கு புலம் பெயர்ந்தனர்.

6. அடைக்கலம் புகுந்த குகைத் தோழர்களை உயிர்த்தெழச் செய்தான்:

திருக்குர்ஆனின் விளக்கத்தை கூறிய அறிஞர்களின் கருத்துப்படி, அக்கால அரசன் மற்றும் தலைவர்களின் வீட்டைச் சார்ந்த சில இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் அறியாமலேயே, ஊர் மக்களின் சிலை வழிப்பாட்டிலும், பலியிடும் சடங்கிலும் கலந்து கொள்ள மனமின்றி, தனித்தனியே வந்து ஓரிடத்தில் கூடினர். கர்வம் கொண்ட கொடுங் கோலனான டாகசியஸ் என்ற மன்னன் அந்நாட்டை ஆட்சி செய்தான்.

இப்னு காதிர் தன்னுடைய குர்ஆன் விளக்கத்தில், கூறுகிறார் "அந்த நாட்டு அரசனை அவ்விளைஞர்கள் அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வரசனோ அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை அச்சுறுத்தி எச்சரித்தாகவும் கூறப்படுகிறது. மேலும் அவ்வரசன், அக்கால வழக்கப்படி அவர்களது ஆடம்பர ஆடைகளையும் அலங்காரங்களையும் உருவி அனுப்பிவிட்டு அன்றிரவு நன்கு யோசித்து  தங்கள் பழைய தெய்வங்கள் மீதே திரும்புமாறு கட்டளையிட்டான். இவ்வாறு அல்லாஹ் அவர்களுக்கு அந்த அரசனின் துன்புறத்தலிலிருந்து  தப்ப வழி ஏற்படுத்தி தந்தான். இவ்வாறே தன் மார்க்கத்திற்காக துன்புறுத்தும் மக்களிடமிருந்து துன்புறுத்தப்படுபவர்கள் தப்பி ஓட இஸ்லாம் மார்க்கம் பரிந்துரைக்கிறது." என்று.

ஆகவே அந்த இளைஞர்கள் தப்பி ஓடி தங்கள் செல்ல நாயோடு குகையில் அடைக்கலம் புகுந்தார்கள். அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். [18:10].

அவர்களது இறைவன் அவர்கள் மேல் தன் கருணையை பொழிந்து அவ்விசாலமான குகையில் அவர்களை தூங்க வைத்தான். இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்). [18:19].

நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம். [18:21].

الحمدلله

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...