4. ஹஜ் கேள்வி-பதில்.
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
4. எக்காரியங்களை இஹ்ராம் மற்றும் ஹஜ்ஜின் போது தவிர்க்க வேண்டும்?
ஒரு முஸ்லிம் இஹ்ராம் அணியும் போது இவ்வுலக சுகங்களையும், பிறருக்கு தன் நிலையை உணர்த்தும் பகட்டான காரியங்களை யும், வீணான செயல்களையும் அல்லாஹ்விற்காக தவிர்த்து, தன்னையே எல்லாம் வல்லவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
இஹ்ராமின் போது தவிர்க்க வேண்டிய ஆடைகள்:
இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும்வரை சில ஆடைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்னு உமர் (ரஜி) கூறுகிறார் “இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?” என்று நபி ﷺ அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி ﷺ அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால்சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச் சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும்போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டிவிடுங்கள்” என்று விடையளித்தார்கள். [ஸஹிஹ் புகாரி, புத்தகம் 7, எண், 2647]
தைக்கப்பட்ட ஆடைகள், கால் சராய், பட்டன் உள்ள ஆடைகள், ஷால் போன்ற போர்த்தகூடியவை, தலைப்பாகை, தொப்பி ஆகியவற்றை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.ஹஜ் கிரியைகளை முடிக்கும் வரை தலை திறந்தே இருக்கவேண்டும். ஆயினும் தலையில் வெயில் படாத விதத்தில் குடை போன்றவற்றால் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
அவ்வாறே “இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்.” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அவர்கள் தைக்கப்பட்ட ஆடைகள் அணியலாம்.
வேண்டும் என்றே மேற்கூறிய தடுக்கப்பட்ட ஆடைகளை அணிந்தால் அவர்கள் ஒரு ஆட்டை பரிகாரமாக கொடுக்க வேண்டும்.
முடி வெட்டுதல்:
இஹ்ராம் நிலையில் முடி வெட்டுவது, ஒரு முடியை இழுத்து நீக்குவதும் கூடாது. அதிகமாக பேன்கள் இருந்தால், நீளமான அல்லது அடர்த்தியான முடியாமல் தலைவலி ஏற்பட்டால், ஓரு செய்யும் போது, குளிக்கும் போது முடி உதிர்ந்து விட்டாலோ தவிர மற்ற நேரங்களில் முடியை கத்தரிக்க கூடாது. அப்படி கத்தரித்தால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும்.
"இஹ்ராம் கட்டியவர் அவர்களின் ஹாதி பலியிடும் இடத்திற்கு சென்றடையும் முடியை நீக்கக்கூடாது. [2:196]" என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
கஃப் பின் உஜ்ரா (ரஜி) கூறுகிறார்: " ஹுதைபிய்யா சமயத்தில் நபி ﷺ அவர்கள் என்னிடம் வந்து, “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்துவிட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ‘ஸாஃ’ பேரீச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கீட்டுக் கொடுப்பீராக!” என்றார்கள். [முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத் மற்றும் புகாரி]
நகங்களை வெட்டக்கூடாது:
தவிர்க்க இயலாத நேரத்தில் வெட்டிக்கொண்டால் அதற்குப் பரிகாரம் ஒரு நகத்திற்கு ஒரு முத் (750 கிராம்) உணவு ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்.
பல் பிடுங்குதல்:
இஹ்ராம் அணிந்த போது இரத்தம் வராமல் இருந்தாலும் பல் பிடுங்குவது கூடாது. இது தடுக்கப்பட்ட செயல். அப்படி செய்துவிட்டால் அதற்கு பரிகாரம் ஒரு ஆட்டை பலியிட வேண்டும்.
நறுமணப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது:
இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை நறுமணப் பொருட்களான வாசனை திரவியங்கள், வாராஸ், சாம்பிராணி, கஸ்தூரி, ஆம்பர் ஹகுங்குமப்பூ, உடலிலோ, ஆடையிலோ, தலையிலோ பூசிக்கொள்ளக் கூடாது. உணவிலும் சேர்க்கக்கூடாது.
அலங்காரப்படுத்தி கொள்ளக் கூடாது:
கண்ணிற்கு சுர்மா அணிதல், வெகு நேரம் கண்ணாடி முன் நின்று அலங்கரிப்பது, ஆண்கள் அலங்காரத்திற்காக காலணிகள், காலுறை, ஸ்டாக்கிங் அணிவது தடுக்கப்பட்டுள்ளது. செருப்பு அணியலாம். அப்படி அணிந்தால் பரிகாரம் ஆட்டை பலியிட கொடுக்க வேண்டும். பெண்கள் இவற்றை அணிவதில் குற்றமில்லை.
மனைவியுடன் உடலுறவில் ஈடுபடக்கூடாது:
மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் சென்றவர் இஹ்ராம் கட்டிய நிலையில் மனைவியுடன் கூடக்கூடாது. திருக்குர்ஆன் கூறுகிறது: “ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட சில மாதங்களாகும். யாரேனும் அம்மாதங்களில் ஹஜ்ஜை தன் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சச்சரவில் ஈடுபடுவது ஆகியவை கூடாது.” (2 :197). விருப்பத்தோடு மனைவியை தொடுவது கூட தடுக்கப் பட்டுள்ளது.
வீணான விவாதங்கள், கீழ்படியாமை, சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவது தடை செய்யப்படுகின்றது:
அருவறுப்பு கொள்வது, பாவம் செய்வது, கீழ்படியாமை, வீணான விவாதங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அக்கிரமம், சச்சரவுகளில் ஈடுபடுவது, அனாவசியமாக முறையிடுவது, விவாதம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சண்டையிடுதல், அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்வது கூடாது.
வரம்பு மீறுதல்:
அல்லாஹ் சூரா மாய்தாவில் கூறுகின்றான்: "முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்" (5:2) அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடங்கள். அதை மீறாதீர்கள்.
எரிச்சல் அடைவது, பொறுமையின்மை ஆகியவற்றை தவிர்க்கவும்:
பல தரப்பட்ட மக்களைக் கொண்ட கூட்டமும், வெயிலும் அதிகமாக இருக்கும் ஓர் இடத்திற்கு நாம் செல்லும் போது நமக்கு எரிச்சலும் பொறுமையின்மையும் அதிகமாகும். சிறிய காரணங்களுக்காக எரிச்சல் படாமலும், விரைந்து முடிக்க வேண்டும் என்று மற்றவர்களை தள்ளிக் கொண்டு செல்லாமல் பொறுமையோடும் சகிப்பு தன்மையோடும் செயல்படுவது சாலச் சிறந்தது.
மற்றவர்களை வெறுக்கக் கூடாது:
நீங்கள் ஹஜ் செய்ய மக்காவில் நுழைய யாராலும் தடுக்கப்பட்டால் அவர்களை வெறுக்காதீர்கள். "இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்." (5:2).
ஆயுதங்களை வைத்தல்:
இஹ்ராம் கட்டிய நிலையில் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை ஏந்தி செல்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் என்பது வாள், ஈட்டி மற்றும் துப்பாக்கி.
உயிர்ப்பிராணியை கொல்லக் கூடாது:
இஹ்ராம் கட்டியவர் எந்த உயிர்ப்பிராணியையும் கொல்லக்கூடாது; உண்பதற்காக வேட்டையாடக் கூடாது; தனக்காக வேட்டையாடுமாறு பிறரைத் தூண்டவும் கூடாது.
“நம்பிக்கையாளர்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். ஏனென்றால், மறைவில் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு”. [5:94]
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள். உங்களில் யாரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றைப் பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். அதை உங்களில் நேர்மைமிக்க இருவர் முடிவு செய்யவேண்டும். அது கஃபாவை அடைய வேண்டிய பலிப்பிராணியாகும். அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது தனது வினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்பு நோற்க வேண்டும். [5:95].
“உங்களுக்கும் இதரபிராணிகளுக்கும் பயனளிக்கும் பொருட்டு (இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதில் கிடைக்கும் உணவுப் பொருட்களும் ஹலாலாக ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது”.[5:96]
இஹ்ராம் கட்டியவர் வேட்டைப் பிராணிகளை உண்பது பொதுவாகத் தடுக்கப்படவில்லை.
உயிர்பிராணிகளைக் கொல்லக் கூடாது என்பதில் சில விலக்குப் பெறுகின்றன. வெறிநாய், எலி, தேள், பருந்து, காகம், பாம்பு ஆகியவற்றை இஹ்ராம் கட்டியவர் கொல்லலாம் என்று நபி கூறியதாக இப்னு உமர் (ரஜி) அறிவிக்கிறார்கள். [முஸ்லிம்]
ஹுதைபிய்யா சமயத்தில் நான் அபூகதாதா (ரஜி) நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். எனது தோழர்கள் இஹ்ராம் கட்டினார்கள். நான் இஹ்ராம் கட்டவில்லை. அப்போது ஒரு (காட்டுக்) கழுதையை நான் கண்டு அதைத் தாக்கி வேட்டையாடினேன். நபி (ஸல்) அவர்களிடம் நான் இஹ்ராம் கட்டவில்லை என்பதையும் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களை சாப்பிடச் சொன்னார்கள். உங்களுக்காகவே வேட்டையாடினேன் என்று நான் கூறியதால் நபி(ஸல்) அவர்கள் சாப்பிடவில்லை. மற்றவர்கள் சாப்பிட்டனர். [அஹ்மத், இப்னுமாஜா].
திருமணம் ஒப்பந்தம்:
உஸ்மான் பின் அஃப்பான் (ரஜி) கூறினார் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக்கூடாது. பிறருக்கு திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது” என்று. (முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா). இஹ்ராம் கட்டியவர் திருமண விழாவில் கலந்துக் கொள்ளக் கூடாது.
இஹ்ராம் கட்டியவர் அந்த நிலையில் திருமண ஒப்பந்தம் செய்தல், திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
الحمدلله
No comments:
Post a Comment