3. ஹஜ் கேள்வி-பதில்.
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
3. ஹஜ்ஜுக்குச் செல்லும் போது எதை சித்தப்படுத்தி கொள்வது நன்மை என்று அல்லாஹ் கூறுகின்றான்?
பதில்: "மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது, தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்." (2:197)
யமனைச் சேர்ந்த சிலர் ஹஜ்ஜுக்காகப் பயணிக்கும் போது உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லாமல் மற்றவர்களையே நம்பியிருந்தனர். மதீனா வந்த பிறகு அவர்கள் உணவிற்காக பிச்சை எடுக்க ஆரம்பித்தனர். யாத்ரீகர்களால் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும், அவர்கள் பயணத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அல்லாஹ் கட்டளையிட்டான்.
இதை ஸஹிஹ் புகாரி, தொகுதி 2, புத்தகம் 26, எண் 598 என்ற ஹதீஸில் இப்னு அப்பாஸ் (ரஜி) கூறுகின்றார்: "யமன் நாட்டு மக்கள் ஹஜ்ஜுக்கு வருவார்கள், போதிய உணவுப்பொருட்களை கொண்டு வராமல், அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறோம் என்று கூறி வந்தனர். அவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன் மக்களிடம் மன்றாடுவார்கள், எனவே அல்லாஹ், "பயணத்திற்கு (உங்களுடன்) உணவை எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் சிறந்த ஏற்பாடு அல்லாஹ்வை அஞ்சுவதே" (2.197) என்று கூறுகிறது.
ஹஜ்ஜிற்கு செல்பவர் உடல் அளவில், மனதளவில், ஆன்மீக அளவில் தன்னை தயாரித்துக் கொள்ள வேண்டும். ஹஜ்ஜில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை அறிந்து கொள்வது முக்கியம், மேலும் ஹஜ்ஜின் சடங்குகளை எவ்வாறு செய்வது என்பதை
புத்தகங்கள் வழியாகவும், அறிஞர்களின்
உரைகளை கேட்டு கற்றுக்கொள்வது அவசியம். தல்பியாவை மனனம் செய்து கொள்ளுங்கள். நல்ல
மனதோடும், எண்ணங்களோடும் அல்லாஹ்வின் வீட்டிற்கு செல்லவும். ஹஜ்ஜை
அல்லாஹ் விரும்பியவாறு நிறைவேற்றவும் அவனிடமே வேண்டிக்கொள்ளுங்கள்.
ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு முன் உங்கள் நோக்கங்களைச் சரிசெய்வது மிகவும் முக்கியம். உங்கள் நோக்கம் அல்லாஹ்வைப் பிரியப்படுத்துவதும், அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதும், உங்கள் அல்லாஹ்விற்கு நீங்கள் அடிமை ன்று காட்டுவதுமாக மட்டுமே இருக்க வேண்டும்.
தூய மனதோடும், அல்லாஹ் கட்டளையிட்ட பிரகாரமும், அல்லாஹ்விடம் முழுமையாய் சரணடைந்து, இஹ்ராம் அணிய வேண்டும். மேலும் நன்மைகள் அடைய பெற்றோர்களுக்காக, அன்பான சொந்தங்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். நீங்கள், உங்கள் முன் இல்லாத ஒருவருக்கு துவா செய்யும் போது, வானவர்கள் உங்களுக்காக துவா செய்வர்.
இந்த பயணத்தை செய்ய சந்தர்ப்பம் கொடுத்ததற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தி, நம் பயணத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறி, அவர்களுடைய நன்மைக்காகவும் பாவமன்னிப்பிற்காகவும் பிரார்த்திக்கவும்.
பயணத்தின் போது ஏற்படும் கஷ்டங்களை பொறுமை யோடு சகித்துக் கொள்ளவேண்டும். ஒழுங்கான உணவு, உறைவிடம் கிடைக்காவிட்டால் அதற்காக கோபப்படாமல், வீண் விவாதங்களில் ஈடுபடாமல், கூட்டத்தில் ஏற்படும் நெரிசல்களில் பொறுமை காத்து, நிறைய நேரம் இபாதத்தில் கழிக்க உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் சந்தர்ப்பங்களை அழகாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உதவி தேவை படுவோருக்கு உதவி செய்ய தயங்காதீர்கள். நற்காரியங்களில் அதிகம் ஈடுபடுங்கள்.
நல்ல எண்ணங்களில், நல்ல பண்புகளில் அல்லாஹ்விற்கு செய்யும் வழிபாடுகளில் உங்கள் மனம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் உங்களை படைத்த, மீண்டும் திரும்பி அவரிடமே செல்லும் இறைவனின் திருப்தியை பெறலாம்.
الحمدلله
No comments:
Post a Comment