Sunday, June 9, 2024

2. ஹஜ் கேள்வி-பதில்.

السلام عليكم ورحمة الله وبركاتة 

  بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

2. விளக்குக:

அ. நான்கு புனித மாதங்கள்

ஆ. தல்பியா

இ. மிகாத்

ஈ. தருவியா நாள்

உ. நஹர் நாள்

ஊ. தஷ்ரீக் நாட்கள்

எ. ஹாதி

அ. நான்கு புனித மாதங்கள்:

"நிச்சயமாக அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. (ரஜப், துல் கதா,  துல் ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம்). (9:36)

இந்த நான்கு புனித மாதங்களில் அநீதி இழைப்பது, கீழ்படியாமை, போர் செய்வது ஆகியவை பெரும் பாவங்கள் ஆகும். இவற்றை இந்த புனித மாதங்களில் செய்தால் அதற்குரிய தண்டனை கடுமையாகவும் அதிகமாகவும் இருக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான்: "(நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்" (2:217)

அரேபியாவில் இந்த நடைமுறை இஸ்லாம் தொடங்குவதற்கு முன்னரே இருந்தது. ஏனெனில் இந்த மாதங்களில் யாத்ரீகர்களும், வியாபாரிகளும் வணக்க வழிப்பாட்டிற்காகவும், வியாபாரத்திற்காகவும் அதிகமாக வருவதால், அவர்கள் குழப்பமின்றி சாந்திசமாதானத்துடன் தன் காரியங்களை நிறைவேற்றி பாதுகாப்பாக தங்கள் இல்லங்களில் அடைய ஏதுவாக இருந்தது. ஆனால் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறிய படி, "(போர் செய்யக்கூடாது என்ற தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்." (9:37). இஸ்லாம் தோன்றிய பிறகு இம்மாதங்களின் புனித தன்மை இன்னும் அதிகமாக கடைப்பிடிக்கப்பட்டது.

ஆகவே இந்த புனித நான்கு மாதங்களின்  முக்கியத்துவத்தையும் அதன் பயன்களையும் உணர்ந்துஅல்லாஹ்வின் மீதுள்ள நம் விசுவாசத்தையும் புதுப்பித்து, அர்ப்பணிப்பையும் அதிகரித்து  நம் வாழ்வின் தரத்தை உயர்த்த முயலவேண்டும்.

ஆ. தல்பியா

அப்துல்லாஹ் பின் உமர் (ரஜி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் அவர்களின் தல்பியா: 'லப்பைக அல்லாஹும்ம லப்பைக், லப்பைக லா ஷரிகா லக லப்பைக், இன்னா-ல்-ஹம்தா வன்-நி'மாத லக வல்மு எல்கே, லா ஷரிகா லக' (அல்லாஹ் உனது அழைப்புக்கு நான் பதிலளிக்கிறேன், உனது அழைப்புக்கு நான் பதிலளிக்கிறேன். மற்றும் உனது கட்டளைகளுக்கு நான் கீழ்ப்படிகிறேன், உனக்கு துணை இல்லை, உனது அழைப்புக்கு நான் பதிலளிக்கிறேன், அனைத்து புகழும் ஆசீர்வாதங்களும் உனக்கே, எல்லா இறையாண்மையும் உனக்கே, உனக்கு இணையானவர்கள் யாரும் இங்கு இல்லை." [ஸஹி புகாரி, தொகுதி 2, புத்தகம் 26, எண் 621]

தல்பியா என்ற இந்த பக்தி மிக்க பிரார்த்தனையை ஹஜ் மற்றும் உம்ரா செல்லும் யாத்ரீகர்கள் இஹ்ராம் அணிந்தவுடன் தொடங்குகிறார்கள். ஆண்கள் உரக்கவும், பெண்கள் மெதுவாகவும்  அடிக்கடி இந்த யாத்திரை முழுவதும் கூறுவது சுன்னாவாகும்.

முஸ்லிம்கள் மக்காவில் நிறைவேற்றக்கூடிய இபாதத்கள் அனைத்தையும் கலப்படமில்லாமல் அல்லாஹ்விற்காக நிறைவேற்றவேண்டும். அவனுக்கு எந்த ஒன்றையும் இணையாக்கக்கூடாது. இந்த பேருண்மையை ஹஜ்ஜின் துவக்கத்தில் தல்பியாவின் மூலம் பகிரங்கப் படுத்துகிறார்கள்.

"எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் (இணைவைத்தல் என்னும்) அநியாயத்தையும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேர்வழியாளர்கள்” (6:82) என்ற அல்லாஹ்வின் வசனத்தை தல்பியா கூறுவதன் மூலம் உண்மை படுத்துகிறார்கள்.

தல்பியா கூறுவதால் உலகத்து செயல்களில் அதிக கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க இறைவனின் நினைவிலேயே ஹஜ்ஜை நிறைவேற்ற ஏதுவாக உள்ளது.

இ. மிகாத்

மிகாத் என்பது "ஒரு குறிப்பிட்ட இடம்".  உம்ரா மற்றும் ஹஜ் செல்லும் யாத்ரீகர்கள், புனித நகரமான மக்காவிற்கு நுழையும் முன் தொழுது, நிய்யத் செய்து இஹ்ராம் அணியும் இடம். இந்த இடங்கள், புனித யாத்திரை செய்பவர்களின் எல்லையை நிர்ணயிக்கும் குறியீடுகளாக அமைந்துள்ளன.

இப்னு அப்பாஸ் அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர்  ﷺ : "துல் ஹுலைஃபாவை மதீனாவாசிகளுக்கு மிகாத் என்று நிர்ணயித்துள்ளார். ஷாம் மக்களுக்கு அல்-ஜுஹ்ஃபா; மற்றும் நஜ்த் மக்களுக்கான கர்ன் உல்-மனாசில்; யமன் நாட்டு மக்களுக்கு யாலம்லாம். எனவே, அந்த இடங்களில் வசிக்கும் அனைவருக்கும் இவை (மேலே குறிப்பிடப்பட்டவை) மவாகித் ஆகும், மேலும் ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் நோக்கத்துடன் அந்த இடங்கள் வழியாக வருபவர்களுக்கும், இந்த இடங்களுக்குள் வசிப்பவர்கள் தங்கள் வசிப்பிடத்திலிருந்து இஹ்ராம் எடுக்க வேண்டும். , மற்றும் இதேபோல் மக்கா மக்கள் மக்காவில் இருந்து இஹ்ராம் எடுத்துக் கொள்ளலாம். [ஸஹீஹ் புகாரி, 1526].

                             

நபி அவர்களுக்குப் பிறகு இஸ்லாம் மற்ற நாடுகளுக்கும் பரவ, கலீஃபா உஸ்மான் (ரஜி) அவர்கள் ஈரான், ஈராக் மற்றும் அந்த திசையில் இருந்து வருபவர்களுக்கான மிகாத்தாக தாட் இர்க் என்ற இடத்தை நிர்ணயித்தார்.

மக்காவில் நுழைந்த இஹ்ராம் களைந்த யாத்ரீகர்கள் மஸ்ஜிதே தானீம் என்றழைக்கப்படும் ஆயிஷா மஸ்ஜிதுல் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.

. தர்வியாஹ் நாள்:

துல் ஹிஜ்ஜாவின் எட்டாம் நாள் தர்வியாஹ் நாள் என்று அழைக்கப் படுகிறது. இப்னு உமர் கூறியதாக  வாபறாஹ் சொல்ல அபு இஸ்ஹாக் பதிவு செய்துள்ளார்: "ஒருவர்  தர்வியாஹ் நாளிலும், அதற்கு முதல் நாளிலும், அரஃபாத் நாளிலும் நோன்பு நோற்கலாம்"

உ. நஹர் நாள்:

துல் ஹிஜ்ஜாவின் பத்தாம் நாள், நஹர் நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்நாளை ஈதுல்-அதா என்றும் கூறுவர். அந்த வருடத்தின் மிகச் சிறந்த நாள் என்று அது கருதப்படுகிறது. இந்நாளில் யாத்திரை செய்யும்  ஹாஜிகளும் யாத்திரை செய்யாதவர்களும் தக்பீர் (அல்லாஹீ அக்பர்) கூறி, ஈத் தொழுகை தொழுது பின் நேர்ச்சை செய்த பிராணிகளை பலி கொடுப்பர். அதை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து தாமும் உண்பர்.

அல்லாஹ் கூறுகின்றான்: "இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்." (22:36)

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!" (22:37)

ஊ. தஷ்ரீக் நாட்கள்:

துல்-ஹஜ்ஜின் 11-12-13-வது நாட்களைத தஷ்ரீக் நாட்கள் என்று கூறுவர். குர்ஆனிலுள்ள இந்த ஆயத் இத்தஷ்ரீக் நாட்களை குறிப்பிடுகிறது என்று இப்னு அப்பாஸ் (ரஜி) கூறுகிறார்: "குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும் (மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார் (ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்." (2:203)

இந்த நாட்கள், கடவுளை நினைவு கூறுவதற்கும், கொண்டாடுவதற்கும் ஒதுக்கபபட்டவை. யாத்ரிகர்கள் இந்நாட்களில் நோன்பு நோற்பதை தவிர்க்க வேண்டும். நபி அவர்கள் கூறினார்: " இந்த நாட்களில் நோன்பு நோற்க வேண்டாம், ஏனெனில் இவை உண்பதற்கு, பருகுவதற்கும் அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கும் ஒதுக்கப்பட்டவை" [அஹ்மத், 10286]

. ஹாதி:

ஹாதி என்பது நஹ்ர் நாளில் முஸ்லிம்கள் (யாத்ரீகர்கள் மற்றும் யாத்ரீகர்கள் அல்லாதவர்கள்) நன்றி தெரிவிக்கும் வகையில்  பிராணியை பலி கொடுப்பதாகும். நபி இப்ராஹிம் (அலை) தனது மகன் இஸ்மாயிலை (அலை) அல்லாஹ்விற்காக பலியிட விரும்பியதை நினைவுகூரும் வகையில் ஹாதி மேற்கொள்ளப்படுகிறது. ஹஜ்ஜின் போது பிராணி பலி கொடுப்பது  கடமை என பின்வரும் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: "ஹஜ் மற்றும் உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்" (2:196)

ஆயிஷா (ரஜி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மனிதன் நஹ்ர் நாளில் செய்யும் செயல்களில்  அல்லாஹ்வுக்கு மிகவும்  பிரியமான இரத்தம் சிந்தும்  செயலை விட எந்தச் சிறந்த செயலையும் செய்வதில்லை.   கியாமத் நாளில் அது கொம்புகள், முடிகள், குளம்புகளுடன் வெளிப்படும், மேலும் அந்த இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அது எங்கிருந்து பெறப்படுகிறதோ அந்த இரத்தம் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும், எனவே உங்கள் இதயம் அதில் மகிழ்ச்சியடையட்டும். [சுனன் அல்-திர்மிதி, 1493]

இப்னு அப்பாஸ் கூறினார்: "ஹாதியில் எட்டு வகையான (ஆண் மற்றும் பெண் உட்பட) விலங்குகள் அடங்கும்:

ஒட்டகம்,

மாடு,

ஆடு மற்றும்

செம்மறி ஆடு.''

ஒரு செம்மறியாடு அல்லது ஆடு பலியிடலாம். அதற்கு மாற்றாக ஒரு ஒட்டகமாகவோ அல்லது ஒரு மாடாகவோ இருந்தால், ஏழு பேர் கூட்டு சேர்ந்து பலியிடலாம். ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு அல்லது பெரிய விலங்குகளில் ஏழில் ஒரு பங்கோ போதுமானது.

அப்துர்-ரஸ்ஸாக் கூறினார்: "ஒருவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுக்கலாம்" என்று அல்-அவ்ஃபி கூறினார்: "ஒருவரால் வாங்க முடிந்தால், ஒட்டகங்கள், இல்லையெனில் விலையைப் பொறுத்து மாடுகள் அல்லது ஆடுகள்."

பலியிடும் விலங்கு ஆரோக்கியமாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். உடல் நலம் குன்றியதாகவும், காயப்பட்டஉடைந்த கொம்புகள் அல்லது பற்கள்  கொண்ட விலங்குகள் தவிர்க்கப்பட வேண்டும். 

الحمدلله

  

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...