Thursday, December 1, 2022

 

51. அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிடில், நிச்சயமாக நாங்கள் நஷ்டம் அடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்."

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

இதை கூறியது யார்?

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்: ஆதம் (அலை) & ஹவ்வா (அலை).

இறைவன் ஆதம் (அலை) மை நோக்கி; "ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப் பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்"  என்று  கூறினான்) (7:19).

அல்லாஹ் அவர்கள் இருவருக்கும் ஒரு சோதனையை கொடுத்தான். அவர்கள் அந்த தடுக்கப்பட்ட காரியத்தை செய்யக்கூடும் என்று எண்ணி அந்த மரத்தின் பக்கம் கூட நெருங்காதீர்கள் என்று எச்சரித்தான். அல்லாஹ் மேலும் கூறினான்: "ஆதமே! நிச்சயமாக ஷைத்தான் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியி லிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்." என்று. (20:117).

"ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத் தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி, "ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?" என்று கேட்டான். (20:120). "பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம்மரத்) தினின்று புசித்தனர். உடனே அவ்விரு வரின் வெட்கத் தலங்களும் வெளியாயின. ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலைகளைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானர்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்."  (20:121).

அதனால் அல்லாஹ் அவர்களை தண்டிக்கும் வகையில்,  "நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு"  என்று கூறினான் (2:36). பின்னர் அவரை தேர்ந்தெடுத்து, அவரை மன்னித்து, நேர்வழியும் காட்டினான்." (20:122). "பின்னர் ஆதம் (அலை) தம் இறைவனிட மிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார் (2:37). அவர்கள் இருவரும் தாங்கள் செய்த குற்றத்தை உணர்ந்தனர். அவர்கள் ஷைத்தா னையோ, சூழ்நிலையையோ குற்றம் கூறவில்லை. தாங்களே தங்கள் குற்றத்திற்கு காரணம் என உணர்ந்தனர்.

அவர்கள் உடனே பச்சாதாபப்பட்டு கூறினார்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிடில், நிச்சயமாக நாங்கள் நஷ்டம் அடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்." (7:23). அவர்களுடைய சுவர்க்கம் பறிக்கப் பட்டதால் மிகுந்த விரக்தியுடன் இருந்த அவர்கள் இறைவனிடம், ஆழ்ந்த மனத்திலிருந்து மன்றாடி இந்த துவாவை ஒப்புகொள்ளுமாறு இறைவனிடம் வேண்டினர். அல்லாஹ்வின் எல்லையற்ற கருணையின் மேல் நம்பிக்கை கொண்டு ஓதியதால் அல்லாஹ்வும் அவர்களை மன்னித்தான். “நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். "

இந்த துவா அவர்கள் இருவருக்கும் அல்லாஹ்வால் கற்றுத் தரப்பட்டது.  இது பச்சாதாபத்திற்காகவும், அல்லாஹ்விடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்பதற்கு முன் மாதிரியாகவும் விளங்கும் துவா. இந்த துவா நம்  இறைவனின் மிகப் பெரிய ஞானத்தை நமக்கு பறை சாற்றுகிறது.

இந்த துவா போலவே  அல்லாஹ் நமக்கு கீழ் கண்ட துவாக்களையும் திருக்குர்ஆனில் அருளியுள்ளான். "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும் எங்க(ளுடைய ஆன்மாக் க)ளைச் சான்றோர் களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" (என்றும்;). (3:193). “மேலும், "நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" (71:10).

இந்த துவாவை மனனம் செய்து தினமும் ஓதுங்கள். ஹஜ்ஜின் போது ஹாஜிகள் அரஃபாத் மைதானத்தில் இந்த துவாவை நெஞ்சுறுக வேண்டி தூய்மை பெறுவர்.

الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...