40. யார் ………………………… (வாங்கித்)
தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால்
தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ
மாட்டார்கள்”
பதில்:
வட்டி.
بِسْمِ ٱللَّٰهِ
ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
ஒருவரிடம்
பணம் கடன் வாங்கும் போது அதற்காக கொடுக்கப்படும் கூடுதல் பணத்திற்கு வட்டி என்று
பெயர். அதை அரபியில் “ரிபா” என்று கூறப்படுகிறது. ரிபா-அல்- நஸியா என்பது பணமாக
கொடுக்கப்படும் வட்டி. ரிபா-அல் ஃபாதி என்பது பொருளாகக் கொடுக்கப்படும் வட்டி. மத
குருமார்கள், சமூகவாதிகள், பொருளாதார
அறிஞர்கள், பல் வேறு மதங்களை சார்ந்த அறிஞர்கள் -
வட்டி ஒரு சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை கொண்டு வரும் ஒரு சமுதாய தீய சக்தி என்று
கருதுகின்றனர். அரேபியா வில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன் இந்த சக்தி வேரூன்றி கடன்
வாங்கியவன் கடன் கொடுத்தவனிடம் அடிமையாகி போவதுமாக இருந்தது.
அல்லாஹ்
வட்டியைப் பற்றிய வசனங்களை நான்கு காலகட்டங்களில் படிப்படியாக இறக்கினான். நபி ﷺ அவர்கள் மக்காவில் இருந்த காலகட்டத்தில் வட்டியை பற்றிய வசனங்களை
முதன் முதலில் இறக்கினான். "(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து
(உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால்
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ,
(அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு
கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்." (30:39) என்று. அல்லாஹ் இதில் மிகவும்
மிருதுவாக வட்டி வாங்குவதால் செல்வம் பெருகாது என்றும் ஜகாத் கொடுப்பதால் செல்வம் பெருகுவதோடல்லாமல்
அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும் என்று கூறுகின்றான்.
ஹிஜ்ராவிற்கு
பிறகு இஸ்லாம் மதீனாவில் பரவிய போது அல்லாஹ் வட்டி வாங்குபவருக்கு அச்சமூட்டி
எச்சரிக்கை செய்யும் விதமாகவும், மறுபடியும் நினைவுறுத்துவதற்காகவும்
ஒரு வசனத்தை இறக்கினான். அக்காலத்தில் மதீனாவிலிருந்த யூதர்கள், அவர்களுடைய வேதம் வட்டி வாங்குவதை முழுவதாக தடுத்தும் அதை ஒரு
வியாபாரமாகவே ஆக்கிக் கொண்டிருந் தார்கள். ஆகையால் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கூறினான், தான் அவர்களுக்காக தண்டனையை சித்தப்படுத்தி வைத்திருப்பதாக. கீழ்
கண்ட வசனம்: "வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும்,
அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான
முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரண மாகவும்,
இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில்
காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்
ளோம்." (4:161) என்பது தான் அது.
மூன்றாவது கட்டத்தில் அல்லாஹ் விசுவாசிகளுக்கே நேரடியாக ஒரு வசனத்தை இறக்கினான்: "ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடை வீர்கள்." (3:130). அல்லாஹ் தனக்கு அஞ்சியாவது வட்டியை தவிர்க்கும் படி விசுவாசிகளுக்கு இதில் கேட்டு கொள்கிறான். இந்த வசனத்தினால் பெரும் விவாதங்கள் ஏற்பட்டு " வியாபாரம் வட்டியை போன்றதே!" என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர்.
பின் அல்லாஹ் வட்டியை தடுக்கப்படடதாக ஆக்கிவிட்டான். இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பிறகும் யார் வட்டி வாங்குகிறாரரோ அவர்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு. சூரா -அல்- பகறாவில் இந்த வசனங்கள் இவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளன: "யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." (2:275). அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்ப தில்லை.” (2:276).
கடைசியாக
அல்லாஹ், "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக
முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்."(2:278) என்று கூறி வட்டியை உண்மையான விசுவாசிகளுக்கு தடுக்கப்பட்தாக
ஆக்கினான்.
"இவ்வாறு
நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய
தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)-
நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும்) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.” (2:279) என்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்தான்.
"தவிர,
அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று
நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்கப்படுவீர்கள்; பின்னர்
ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்;
மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா."
(2:281) என்றும் கூறினான் அல்லாஹ்.
வட்டி
வாங்குவது ஹராம். ஏனெனில்:
• கடன் கொடுத்த பணக்காரன் ஏழையை சுரண்டுகிறான்.
• கடன் வாங்கிய ஏழை, கடனால் வட்டி, வட்டியால்
கடன் என்ற சூழற்சியில் சிக்கி தவிப்பான்.
• இதனால் அவனுடைய ஏழ்மை இன்னும் அதிகமாகும்.
• இது ஒரு வகையான ஊழல். இதனால் ஒருவர் கடனாளி
ஆகுகிறார். பிறருக்கு கடனை அடைக்க ஜகாத்
கொடுக்க கடமையாக்கப்பட்டிருந்தும் கடனாளிகளிடம் மேலும் பணம் வசூலிக்கப்படுகிறது.
• ஒருவர் பணத்திற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க
அவரிடம் வட்டி என்ற பெயரில் மேலும் பணம் பறிப்பது ஒழுக்கக்கேடானது.
• வட்டி வாங்குவதால் பணக்காரன், ஏழையினால் நன்மை அடைகின்றான்.
• பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார் கள்.
ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆகிறார்கள்.
• ஷைத்தான் பணக்காரர்களை பேராசைகாரனாக் குகிறான்.
மேலும் சுயநலக்காரனாகவும் கடினமான மனதுடையவனாகவும் ஆக்கிறான்.
• பணம் கொடுத்தவன் பரஸ்பர சகோதரத்துவத் திற்கும்
அனுதாபத்திற்கும் முரணாக நடக்க ஆரம்பிக்கின்றான்.
• அவன்
பணம் வாங்கியவனிடமிருந்து அசலையும் வட்டியும் வாங்க அவனுடைய சூழ்நிலை புரியாமல்
அவனுக்கு நெருக்கடி கொடுக்கிறான்.
• இவ்வளவு கஷ்டங்களையும் தவிர்க்க வட்டி
வாங்காமல் அல்லாஹ்விற்காக ஏழைகளுக்கு கடன் உதவி செய்ய எல்லாம் வல்லவன்
விரும்புகின்றான்.
வட்டியை
பற்றிய ஆஹதீஸ்:
"அல்புகாரியின்
பதிவின் படி சமூரா பின் ஜீன்டுப் ஒரு நீண்ட ஹதீஸில் நபி அவர்களின் கனவை பற்றி
கூறுகையில், நாங்கள் ஒரு ஆற்றை அடைந்தோம். நான் நினைக்கிறேன் - அவர் கூறினார் - ஆறு
இரத்தம் போல் சிகப்பாய் இருந்தது. அதில் ஒருவன் நீந்திக் கொண்டிருந் தான். அதன்
கரையில் இன்னொருவன் அருகே நிறைய கற்களை வைத்துக் கொண்டு உட்கார்ந் திருந்தான்.
நீந்திக் கொண்டிருந்தவன் கரை அருகே வந்து வாயை திறக்க, கரையில்
இருந்தவன் கல்லை அவன் வாயில் எறிந்தான். கனவின் விளக்கம் யாதெனில் நீந்திக்
கொண்டிருப்பவன் வட்டி வாங்கியவன் என்பது. (இப்னு காதிர்).
நபி
ﷺ ஒரு தடவை கூறினார், "ஏழு கொடிய செயல்களை தடை செய்யுங்கள்." கேட்டுக் கொண்டிருந்த நபி
தோழர், "யா ரஸீலுல்லாஹ் ﷺ ! அவை என்ன?" என்று கேட்க: "அல்லாஹ்விற்கு இணை
வைப்பது, சூனியம் செய்து காட்டுவது, மனிதனை கொல்வது இவை அல்லாஹ்வே தடுக்கப்பட் டதாக ஆக்கினான்-
அல்லாஹ்வால் கூறப்பட்ட உரிமையைத் தவிர- வட்டி வாங்கி உண்பது, அநாதைகளின் சொத்தை உண்பது, போரில்
முன்னேறும் போது தப்பி ஓடுவது, நல்லொழுக்கமுள்ள அப்பாவியான
விசுவாசமுள்ள பெண்ணை அவதூறு கூறுவது ஆகியவை என்றார்."(நஸாய்)
நபி
ﷺ அவர்கள், "வட்டி
வாங்குபவரை, கொடுப்ப வரை, அதை
எழுதி வைப்பவரை மேலும் அதற்காக சாட்சி கூறும் இருவரையும் சபித்தார். மேலும்
கூறினார்: இவர்கள் எல்லோரும் குற்றம் செய்ததில் சமமானவர்கள்" என்றும்
கூறினார்.(ஸஹீஹ் முஸ்லிம்).
இந்த
வசனம் கடைசியாக இறங்கிய வசனங்களில் ஒன்று.
நபி ﷺ அவர்கள் தன்னுடைய கடைசி ஹஜ்ஜின் போது
பல லடசக்கணக்கானோர் கூடிய கூட்டத்தில் ரிபாவை பற்றி பேசினார். ஜாபிர் இப்னு
அப்தல்லாஹ் அவர் ஆற்றிய உரையிலிருந்து குறிப்பிட்டுள்ளார்: " ஜஹாலியா (இஸ்லாத்திற்கு முன்) காலத்தில் வாங்கிய
வட்டியை ரத்து செய்கிறேன். முதலில் நான் ரத்து செய்யும் வட்டி எங்கள் வட்டி. அப்பாஸ்
இப்னு அல்-முத்தலிப் அவர்களுக்கு வர வேண்டிய
வட்டி. அதனை நான் முழுவதுமாக ரத்து செய்கிறேன்." (ஸஹீஹ் முஸ்லிம்).
நபி
ﷺ கூறியதாக
அப்தல்லாஹ் இப்னு ஹான்ஜழா குறிப்பிடுகிறார்: ஒரு திர்ஹம் வட்டியை ஒரு
மனிதன் தெரிந்து பெற்றால் அது முப்பத்து ஆறு தடவை தடவை விபச்சாரம் செய்ததை விட
இழிவானது. (மிஷ்காட் மஸாபிஹ்)
நபி
பெருமானார் ﷺ
குறிப்பிட்டதாக அபு ஹீரைரா கூறிய ஆஹதீஸ்:
"நான்
செய்த இரவு பயணத்தின் போது சில மனிதர்களை காண நேர்ந்தது. அவர்களின் வயிறுகள் வீடு
போல் பெரியதாகவும், அதனுள் பாம்புகள் இருப்பது தெளிவாக
வெளியிலிருந்தே தெரிந்தது. நான் ஜிப்ரீல் (அலை) மிடம் கேட்டேன் இவர்கள் எல்லாம்
யாரென்று? அதற்கு அவர், இவர்கள்
எல்லாம் வட்டி வாங்கி உண்டவர்கள் என்று பதிலளித்தார்கள். (இப்னு மாஜாஹ்)
"அல்லாஹ்
நான்கு பேர்களை சுவர்க்கத்தில் நுழைய அல்லது அவனது அருளை பெற அனுமதிக்கமாட்டான்:
வழக்கமாக மது அருந்தவனும், வட்டியை வாங்குபவனும், அநாதைகளின் சொத்தை உரிமையில்லாமல் அபகரித்தவனும், பெற்றொர்களின் கடமையை நிறைவேற்றாதவனும்" (முஸ்தாத்ட்ராக் அல்-
ஹகீம், கிதாப் அல்- புயூ).
"மனித குலத்திற்கு ஒரு நேரம் வரும் அப்போது எல்லோரும் வட்டி வாங்குவார்கள். அப்படி அவன் வாங்கவில்லை என்றால் அதனுடைய தூசி அவனை அடையும்." (அபு தாவூத், கிதாப் அல்-பையு, இப்னு மஜாஹ்)
“மறுமை
நாளில் வட்டி வாங்குபவர்கள் பைத்தியக்காரர்களாக எழுப்பப் படுவார்கள். மற்றவர்கள்
அவருடைய பைத்தியத்தை கண்டு அவர் வட்டி வாங்கியவர் என்று அறிந்து கொள்வர்."
(தஹாபி)
நபி
ﷺ மேலும் கூறுகிறார்: "மறுமை நாளில்.
மக்கள் தங்கள் கல்லறையி லிருந்து வெகு துரிதமாக எழுப்பப்படுவார்கள் இவ்வுலகில்
வட்டி வாங்கிய வர்களைத் தவிர. அவர்கள் எழுந்து நிற்பார்கள் ஆனால் வலிப்பினால்
தாக்கப்பட்டவரை போல் கீழே விழுந்து விடுவார்கள். அவர்கள் எழுந்து நிற்க முயற்சி
செய்த போதெல்லாம் வட்டி வாங்கிய காரணத்தினால் விழுந்து விடுவார்கள். இது மறுமை
நாளில் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை. அல்லாஹ் அவர்களின் வயிற்றில் கனமான பொருட்களை வைத்து நிரப்பி யதால் எழுந்து
நிற்கும் போது கவிழ்ந்து கீழே விழுந்து விடுவார்கள். அவர்கள் மற்றவர்களோடு
சேர்ந்து செல்ல ஆசை படுவார்கள் ஆனால் அவர்களால் அது முடியாது. (தஹாபி).
நவீன
காலத்தில் கொடுக்கல் வாங்கல் என்பது மிகவும் மாறிவிட்டது. ஒரு முஸ்லிமிற்கு எந்த முறை வட்டி உகந்தது
என்பதும் எந்த முறை தடுக்கப்பட்டது என்பதில் தெளிவில்லை. இஸ்லாமிய அறிஞர்கள்
கலந்தாலோசித்து முடிவு செய்த இஸ்லாமிய ஷரியாவில் கீழே கொடுக்கப்பட்டவை
தடுக்கப்பட்டுள்ளது:
• வங்கிகளில் சேமிப்பு நிதிக்கும், நிலையான வைப்பு நிதிக்கும் கொடுக்கும் வட்டி.
• சொத்து வாங்குவதற்கு வட்டியோடு வாங்கும் கடன்,
மேல் படிப்பிற்காக வாங்கும் கடன் அல்லது பிற தேவைகளுக்காக வாங்கும் கடனுக்கு
வட்டி ஆகியவை.
எந்த
ஒரு விசுவாசி தவிர்க்க முடியாத காரணத்தால்
தன் வங்கியிலிருந்து வட்டி பணம் பெற்றால் அதை தான் உபயோகப்படுத்தாமல் ஏழைகளுக்கும்
தேவை உள்ளவருக்கும் பகிர்ந்த அளிப்பது சாலச்சிறந்தது.
الحمدلله
No comments:
Post a Comment