Tuesday, November 15, 2022

 

35. கோடிட்ட இடங்களை நிரப்புக:

 .......................கள், .........................களை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்: “நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று கூறுவார்கள்.

பதில்: நரகவாசிகள்,  சுவர்க்கவாசிகளை அழைத்து கேட்பார்கள். (7:50).

 ﺑﺴْـــــــﻢِﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍلرَّﺣِﻴﻢ                             

நரகவாசிகள் யார் என்றால்:

*  அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொள்பவர்கள் (2:165),

*  யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்கள் (4:56),

*  இறுதி விசாரணக் காலத்தையே பொய்ப்பிக்க முற்படுகின்றவர்கள் (25:11)

* மறுமையில் உயிர்த்து எழுவதை நிராகரிப்பவர்கள் (17:98),

* கடைசி நாளை நிராகரிக்கும் அநியாயக்காரர்கள் (18:29),

*  அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறவர்கள் (4:10),

* ஷைத்தான் வழிகெடுத்து விட்ட மக்கள் (36:63),

*  இடது பாரிசத்திலுள்ளவர்கள் (56:41),

*  அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்கள் (3:162),

* ஈமான் கொண்ட பின் (நிராகரித்து) காஃபிர்களாகிவிட்டவர்கள் (3:106),

* தீமையைச் சம்பாதித்தவர்கள் (10:27),

* (நன்மைகளின்) எடை இலேசாக இருக்கின்றவர்கள் (23:103),

* (வரம்பு மீறிப்) பாவம் செய்பவர்கள் (32:20), குற்றம் செய்பவர்கள், (7:41) அநியாயக்காரர்கள் (37:63),

*  இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத் தவர்கள் (79:38).

*  அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டவர்கள் (4:167),

* தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து (அல்லாஹ்விற்காக) போர் புரிவதை வெறுப்பவர்கள் (9:82),

* தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டவர்கள் (7:51),

 

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

 அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் (89:23). அப்போது பார்ப் போருக்கு(க் காணும் வகையில்) அது வெளிப் படுத்தப்படும். (79:36).

மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் இலக்கை அடைய முடியாது. இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். (19:71).

சிலர் இவ்வசனம், தங்கள் நிலையான இருப்பிடத்தை அடைய சிராத் பாலத் தை கடப்பதை கூறுகிறது என்று குறிப்பிடுகின்றனர். சிராத் பாலம் என்கின்ற வார்த்தை குர்ஆனில் குறிப்பிடப் படவில்லை.

 

திருக்குர்ஆனில் கூறப்பட்ட நரகம்:

*  நரகம் காஃபிர்கள் எதிர்பார்த்துக்                                   கொண்டிருக்கும் இடம் (78: 21),

* காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்          

  பட்டுள்ளது (2: 24),

* அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டது. (38:56)

* இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும் (18:29)

* அதன் வேதனை நிரந்தரமானதாகும் (25:65)

*  ஜின்கள், மனிதர்கள் ஆகியவரைக் கொண்டு நிரப்ப உறுதி செய்யப்பட்ட இடம் (11:119).

* அதன் அடித்தளத்தில் 'ஜக்கூம்' என்ற மரம் இருக்கும். அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும் (37:62- 65).

* அதன் அடர்ந்து இருண்ட புகையின் நிழலில் குளிர்ச்சியும் இருக்காது நலமும் இருக்காது (56: 43 & 44).

* அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப் பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும். (15:44).

* அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர் (74:30).

*  அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்அல்லாஹ் அவர்களை ஏவப்பட்டபடியே செய்வார்கள். (66:6).

* அதன் எரிபொருள் மனிதர்களும், (அவர்கள் வணங்கும்) கல்லுமேயாகும் (2:24; 21: 98 & 99 & 66:6).

*  வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச் சலையும்  கேட்பார்கள் (25:12)

*   உலக நெருப்பின் உஷ்ணத்தை விட எழுபது தடவை  உஷ்ணமானது நரக நெருப்பு!

* அது விசாலமானது, ஆழமானது, ஏழு அடுக்குகளை கொண்டது.

 

நரகத்தில் குற்றவாளிகள் இழிவுபடுத்தப்படுவர்:

அல்லாஹ் நரகவாசியை பார்த்து, "அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரி கண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள். பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள். பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள் (என்று உத்தரவிடப் படும்)." (69:32). அங்கு அவர்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப் படுவார்கள் (25:34) அல்லது சங்கிலியால் கட்டி எறியப்படுவார்கள் (25:13).  (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள் (55:41).  அவர்களுடைய ஆடைகள் தாரால்  ஆகி இருக்கும். (14:50) அதில் அவர்கள் மரிக்கவும் மாட்டார்கள். வாழவும் மாட்டார்கள் (20:74). (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும். (67:6). அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காணமாட்டார்கள் (18:53).

 

நரகவாசிகளின் தண்டனை:

"அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் சேமித்து வைத்த பொன்னையும், வெள்ளியையும் நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களு டைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் (9:34 & 35). (நரக நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (18:29). நெருப்பு அவர்க ளுடைய முகங்களை கரிக்கும்; இன்னும் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள். (23: 104).

அவர்களுக்காக நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும். அதைக்கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும். அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும் போதெல்லாம், "எரிக்கும் வேதனையைச் சுவை யுங்கள்" (என்று சொல்லப்படும்). (22:19, 20 & 22). நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் ஆழமான அடித்தளத்தில்  தான் இருப்பார்கள் (4:145).அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமா க) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் (4:56).

"அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள். பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். (44:47 & 48) என கூறப்படும்.

நரகவாசிகள் அழிவை அழைப்பார்கள்.  "இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவை அழைக்காதீர்கள்; இன்னும் பல அழிவுகளை வேண்டியழையுங்கள்" (என்று அவர்களிடம் கூறப்படும்) (25:13).

 

நரகவாசிகள் கதறி அழுது கூறுவார்கள்:

"அவர்கள் நரகத்தில் "யா மாலிக்" உமது இறைவன் எங்களை முடித்து விட்டு மே!" என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் "நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே" என கூறுவார்." (43:77). இவ்வேதனையை ஒரு நாளைக்கு (மட்டுமாவது) எங்களுக்கு இலேசாக்கும் படி உங்கள் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று (நரக) நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலாளிகளை நோக்கி கூறுவார்கள். உங்கள் தூதர்கள் உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?" என (அக்காவலாளிகள்) கேட்பார்கள். "ஆம்! நிச்சயமாக"  என அவர்கள் பதில் கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை. (40:50 & 51). தங்களைக் காப்பவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள். (33:65).

 

நரகவாசிகளின் உணவும் பானமும்:

அவர்களுக்கு உண்ண சீழ்  (38: 56)  மற்றும் ஜக்கூம் (கள்ளி) மரம் கொடுக்கப்படும். (44:44 & 56:52) "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவார்கள் (56:53) அது உருக்கப்பட்ட செம்பு போலிருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும், வெந்நீர் கொதிப்பதைப் போல் (44:45 & 46). அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது (88:7). அதில் அவர்கள்  குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.  (78:24).

இன்னும் அவர்களுக்கு கொதிக்கும் ஊற்றிலிருந்து (88:5) நீரும் (துர் நாற்ற முள்ள) சீழ் நீரும் குடிக்கக் கொடுக்கப்படும்.(14:16, 6:70 & 37:67) அதை அவர்கள் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவார்கள் எனினும் அது அவர்கள்  தொண்டையில் எளிதில் இறங்காது (14:17). மேலும் அவர்கள் (தண்‌ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது

சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! (18:29). அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக் கப்படும்.( 22:19). நரகத்தில் உள்ளவர்களும்சுவர்க்கத்தில் உள்ளவர்களும், சிகரத்தில் உள்ள வர்களும் ஒருவரை ஒருவர் கண்டு  யார் என்று அறிந்து கொள்வார்கள். நரகவாசிகள் சுவர்க்க வாசிகளை   பார்த்து,  "குடிக்க தண்ணீர் மற்றும் அங்கு கிடைப்பதை எங்களுக்கு தாருங்கள் என்று கோருவார்கள்." (7:50)

அல்லாஹ் அவர்களை இழிவு படுத்திவிட்டான். (ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை  வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்” (7:51 & 45:3 ) அவர்கள் மறுமை வாழ்விற்காக  எதையும் சேர்த்து வைக்கவில்லை.  இந்த இறுதி நாளின் சந்திப்பை அவர்கள் மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விட்டோம் (9:67) என்றும்,

"நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்" என்றும் அல்லாஹ் கூறுவான் (20:126).

இப்னு காதிர் தன் விளக்க உரையில் இவ்வாறு விளக்கியுள்ளார்,  "ஸயித் பின் ஜூபைர் இந்த ஆயத்தை குறித்து பேசும் போது, "ஒரு நரகவாசி தன் தந்தையையோ அல்லது சகோதரனையோ பார்த்து, நான் எரிந்து கொண்டி ருக்கின்றேன்என் மேல் சிறிது தண்ணீர் ஊற்றுங்கள்" என்று கூறினார்.

அதற்கு  நம்பிக்கையாளர்கள் பதிலளிக்க கேட்டு கொள்ளப்படுவர்.  அவர்கள் பதில் அளிப்பார்கள்,  "நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்" என்று கூறுவார்கள். இதை  (7:50) உத்மான் அத்-தஃ காஃபிகூறியதாக, அத்தாவரி குறிப்பிடுகிறார்.

 

அல்லாஹ் நமக்கு குர்ஆனில் கூறியதைப் போல் நரக நெருப்பை விட்டு இரட்சிக்க இவ்வாறு பிராத்தியுங்கள்:

★ "எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத்

  திருப்புவாயாக. நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்"  (25:65).

★ "எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமை யிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக.   இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனை யிலிருந்தும் காத்தருள்வாயாக!" (2:201).

★ "எங்கள் இறைவனே! நாங்கள் உம்மீது நம்பிக்கைக் கொண்டோம்! எங்கள்   குற்றங்களை மன்னித்து நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை இரட்சிப்பாயாக! (3:16).

★ "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லைநீ  மகா தூய்மை யானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து   எங்களைக் காத்தருள்வாயாக!" (3:191).

★ "எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவர்களை  நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய். மேலும் அக்கிரமக்  காரர்களுக்கு உதவிசெய்வோர் எவருமிலர்!" (3:192).

 

 நபி (ﷺ ) அவர்கள் இப்படி பிரார்த்தித்தார்கள்:

யா அல்லாஹ்! என்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக!

யா அல்லாஹ்! என்னை கல்லறையின் தண்டனையிலிருந்தும்,  நரக நெருப்பின்  தண்டனையிலிருந்தும் இரட்சிக்க உன்னிடத்தில் பாதுகாவல்   தேடுகின்றேன்."

யா அல்லாஹ்! நான் எனக்காக  சுவர்க்கத்தை  தர உன்னிடம் வேண்டுகிறேன். என்னை நரக நெருப்பின் வேதனையிலிருந்து இரட்சிப்பாயாக!

                     ஆமின்! யா ரப்புல் ஆலமீன்!

                                        الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...