Friday, November 11, 2022

 

31. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்"  என்று நிச்சயமாக கூறாதீர்கள். --------------  -------------- அன்றி. தவிர, (இதை) நீர் மறந்து விட்டீர்களானால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக!

பதில்: இன் ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால்.

 

முஹம்மத் (ﷺ) அவர்கள்  நபியாக புகழ்பெறுவதையும், இஸ்லாம் வேகமாக வளர்வதையும் கண்ட விக்ரக ஆராதனையாளர்களும், குரைஷிகளும்,  (நாதிர் இப்னு ஹாரித், உக்பா இப்னு அபி முஅய்த் என்ற) இருவரை மதீனாவிற்கு அனுப்பினர். அங்கு சென்ற அவர்களிருவரும் வேதம் கற்ற யூத அறிஞர்களிடம், நபி (ﷺ) அவர்களின்  நபித்துவத்தைப்பற்றி கேட்டறிந்தனர்.

 அந்த யூத அறிஞர்கள், நபி(ﷺ)  அவர்களிடம்  3 கேள்விகளை கேட்குமாறு கூறினர். அக்கேள்விகளுக்கு அவர் சரியான பதில் கூறினால் அவர் உண்மையான நபி என்றும் அதற்கு பதில் கூறாவிடில் அவர் நபியல்லநபி என்று நடிப்பவர் என கூறினர்.

 1. "அவரிடம் பழங்காலத்தில் இருந்த விசித்திரமான கதை கொண்ட சில இளைஞர்களின் விதி என்னவாயிற்று?" என்று கேளும்.

 2. "சூரியன் உதிக்கும் இடத்திற்கும் அஸ்தமிக்கும் இடத்திற்கும் யாத்திரை செய்த மனிதனின் வரலாறு என்ன?" என்று அவரை கேளுங்கள்.

 3. ஆன்மா என்றால் என்ன? என்று அவரை கேளுங்கள்.

என்று ஆலோசனை வழங்கினர். அவ்விருவரும் மக்காவிற்கு திரும்பி, அப்படியே இதை குரைஷிகளிடம் கூறினார்கள்.

இதை கேட்டு குரைஷிகள் மிக்க சந்தோஷம் கொண்டு "ஆம்! அவருடைய நபித்துவத்திற்கு இது மிகவும் முக்கியமான சோதனை" என்று கூறி நபி (ﷺ)டம் இந்த மூன்று கேள்விகளை கேட்டனர். நபி(ﷺ)  அவர்களும் உடனே, "நாளை நான் நிச்சயம் இதைப் பற்றி கூறுகின்றேன்" என்று பதில் அளித்து விட்டார். எல்லாம் அறிந்த அல்லாஹ் இதன் விளக்கத்தை நாளை வஹி மூலம் தனக்கு அறிவிக்கக்கூடும் என்று எண்ணினார். ஆனால் "இன்ஷா அல்லாஹ்" என்று கூற மறந்துவிட்டார்.

"இன் ஷா அல்லாஹ்" என அவர் கூறாததால் 15 நாட்கள் வரை இதை பற்றிய வஹி வரவேயில்லை. 'நிச்சயமாக நாளை கூறுகின்றேன் என்று கூறியவர் ஏதும் கூறாததால் குரைஷிகள் அவர் நபியே இல்லை என்று சந்தோஷம் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் நபி(ﷺ)  அவர்கள் மிக்க மன வேதனை அடைந்து தான் தினந்தோறும் செய்யும் வேலைகளையும் சரி வர செய்ய முடியாமல் போயிற்று.

15 நாட்களுக்குப் பிறகு ஜிப்ரீல் (அலை) முழு  கஹஃப் சூராவை வஹி  மூலம் ஓத, அதில் 23 , 24 வசனங்களில் இவ்வாறு கூறப்பட்டது: "(நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும்  "நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்" என்று நிச்சயமாக கூறாதீர்கள். "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்" என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி. தவிர, (இதை) நீர் மறந்து விடாமல் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக. இன்னும், "என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக் கூடும்" என்றும் கூறுவீராக!" (18:23 & 24).

குகை தோழர்களின் கதையும்துல்கர்னைனின் வரலாறும் குரைஷிகளின் வாயை அடைத்து, அவர்களை திருப்தியடைய வைத்தது. யூதர்கள்  "இரட்டை கொம்பன்" என கூறிய துல்கர்னைனின் பொய்யான கதையின் உண்மையான வரலாற்றிற்கு சாட்சியாக சூரா கஹஃப் அமைந்தது. (இப்னு ஹிஷாம், பகுதி 1,  102 & 103).  மூன்றாவது கேள்விக்குரிய பதில் 17-வது அத்தியாயத்தில் மிகவும் சுருக்கமாக தொகுக்கப்பட்டுள்ளது:

"(நபியே!)  உம்மிடம் ரூஹை (ஆன்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூஹு' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில் லை" எனக் கூறுவீராக." (17:85).

 நபி(ﷺ)  அவர்களுக்கே இன்ஷா அல்லாஹ் சொல்லாததால் இப்படிப்பட்ட மனக்கஷ்டம் என்றால் நமக்கு எல்லாம் எவ்வளவு பெரிய தண்டனை காத்துக் கொண்டிருக்கும்! அஸ்தகஃபூருல்லாஹ்! அல்லாஹ் நம்மை நம் அலட்சியத் திலிருந்து காப்பாற்றுவனாக!

 "இன்ஷா அல்லாஹ்" என்கிற இந்த வார்த்தை, எல்லா முஸ்லிம் நாடுக ளிலும் வெகுவாக பயன் படுத்தப்படுகிறது. சில சமயங்களில் இவ்வார்த் தைக்கு தவறான/ எதிர் மறையான அர்த்தம் கொண்டு புழங்கப்படுகிறது. சிலர் இதனை "அநேகமாக ஆகலாம்" அல்லது "அநேகமாக இல்லை" அல்லது "நான் நிச்சயமாக செய்வேனா என  தெரியவில்லை" என பொருள்படும்படி கூறு கின்றனர். அதை செவிமடுப்போரும் "இதை நிச்சயமாக செய்வீரா இல்லையா?" அல்லது  "இதை கட்டாயமாக செய்து விடுவாயா?"என கேட்கின்ற னர். அல்லாஹ்வை தவிர யாருக்கு தெரியும் ஒரு நொடிக்குப் பின் என்ன நடக்கும் என்று?

 உண்மையான விசுவாசி "இன்ஷா அல்லாஹ்" என கூறும் போது அதன் உண்மையான அர்த்தத்தோடு கூற/செவிமடுக்கவேண்டும். "அல்லாஹ் நாடினால்" தான் எதுவும் நடக்கும்.


No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...