Wednesday, October 12, 2022

 குர்ஆனின் மகத்துவம்

 

     குர்ஆன்  ஒரு தெய்வீக திருமறை. இது நமது திருத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மத்   அவர்களுக்கு வானதூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களால் அல்லாஹ்  சுப்ஹானஹுதாலா விடமிருந்து இறக்கியருளப் பட்டது. நபி பெருமானார்   அவர்களுக்கு சிறிது சிறிதாக 13 வருடங்கள் மக்காவிலும், 10 வருடங்கள் மதீனாவிலும் அருளப்பட்டது.

 

     குர்ஆன்  அறிவை தேடுபவருக்கு ஒரு புதையல். கல்வி திறமை வாய்ந்தவர்களுக்கு அது ஒரு அதிசயம்.  இந்நூல் அல்லாஹீதாலாவின் காலவரைய‌ற்ற, எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய   வசனங்களைக் கொண்டது. மிகச் சிறந்த இலக்கிய நயமும், கேட்பவரை வசப்படுத்தும் ஓசை நயமும் கொண்டது. இதயங்களில் உள்ள நோய்களுக்கு இது ஒரு சிறந்த நிவாரணி. விசுவாசிகளுக்கு இது நேர்வழிகாட்டியாகவும், அருளாகவும் அமைந்துள்ளது. வாசிப்பவருக்கு ஊக்கத்தையும் மன அமைதியையும் அளிப்பது. இது வாழ்வின் நெறிமுறைகளையும், மரணம், உயிர்த்தெழுதல், தீர்ப்பு நாள் ஆகியவற்றையும் வலியுறுத்தும் ஒரு ஒப்பற்ற நூல். இது இறைவனின் படைப்பாற்றலை விளக்கும் வசனங்களையும், சர்வ வல்லமையுடையவன் இருக்கின்றான் என்று பறை சாற்றும்  தெளிவான அத்தாட்சிகளை கொண்ட வசனங்களையும், அறியாத சரித்திர கதைகளையும் பல அறிவியல் பேருண்மைகளையும் சிறந்த உபதேசங்களையும் கொண்ட இணையிலா நூல். மற்ற வேத ஆகமங்கள் போல் இதன் சாரம் பல நூற்றாண்டுகளாக மாற்றப்படாமல் இறக்கப்பட்ட விதமாகவே இன்றும் உள்ளது. இந்நூல் லவ்ஹுல்  மஹ்ஃபூள் என்ற குறிப்பேட்டில் தூய்மையான வானவர்களால்  பாதுகாக்கப்பட்டுள்ளது.

    அல்லாஹ் தன் திருவசனங்களால் குர்ஆனைப் பற்றி தன் வேதத்தில் பல இடங்களில் விவரித் துள்ளான்: இது  தெளிவாக கூறப்பட்ட வசனங்க ளைக் கொண்ட திருமறை (41:3). எந்தவித சந்தேகமு மில்லாமல் இத்திரு வேதம் யபக்தியாளர்களுக்காக அருளப்பட்ட  நேர்வழிகாட்டி (2:2). இது ஞானம் மிகுந்த வேதமாகும்.(36:2). இது நம்மை படைத்த இறைவனிட மிருந்து வந்த உண்மையாகும் (32:3). இதன் வசனங்களை கேட்பவர்களுடைய தொலி களின் உரோமக்கால்கள்  சிலிர்த்து விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன (39:23). இவ்வேதத்தில், தெளிவாக்கும் வசனங்களையும்முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் (24:34) காணலாம். இன்னும், இதில் மனிதர்ளுக்காக எல்லாவித உதாரணங் களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக அல்லாஹ் திடமாக எடுத்துக் கூறியுள்ளான். (39:27). இது ஞானம் நிறைந்த (3:58), உங்கள் இறைவனிட மிருந்து வந்த (7:63) அகிலத்திலுள்ள மக்கள் யாவருக்கும் (12:104 & 6:90), மேலும் விசுவாசிகளுக் கும் (11:120) சிந்திக்கும் மக்களுக்கும் (11:114)  ஒரு நினைவூட்டலே தவிர வேறில்லை.

 

      திருக்குர்ஆன் இறுதி நபியாகிய பெருமானார்   அவர்களுக்கு ஒலி வடிவில் அருளப்பட்டது. இது உலக மக்கள் அனைவருக்கும் ஓரே இறைவன் என்றும், அவருக்கு  இணைவைப்பது பெரும் பாவம் எனவும் வலியுறுத்தும் நூலாகும்.  நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்று நன்மாராயங் கூறுகிறது (17:93, 3:47 & 46:12) நிராகரிப்பவர்களுக்கு நிரந்தர தண்டனை உண்டு என்று அறிவிக்கின்றது (36:70). மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது என்றும் (9:38), ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தையும் உயிர்தெழுவதையும் சுகித்தே தீரும் என்றும் பறைசாற்றுகிறது.

 

       இத்திரு வேதம் விசுவாசிகளை நன்மையின் பக்கம் அழைத்து, தீயதிலிருந்து  விலக்குகிறது (3:104, 110; 9:71, 9:112, 31:17). தொழுகையையும், பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேட வழிகாட்டுகிறது (2:45). தொழுகையை நேரத்தோடு தொழவும் (4:103), ஜகாத்தை (22:78) இரகசியமாகவும், பகிரங்கமாகவும் கொடுக்கவும், நன்மையைக் கொண்டு தீமையைத் தடுக்கவும் (13:22), பணிவோடும் இரக்கத்தோடும் பெற்றொர்களுடன் நடக்கவும் (17:24) உபதேசிக்கிறது. சத்தியங்களையும் (16:92) வாக்குறுதிகளையும் நிறைவேற்றவும், அநாதை கள்  பொருளை நியாயமான முறையில் பராம ரிக்கவும் (17:34) மானக்கேடான விபச்சாரத்திற்கு நெருங்காமலும் (17:32) இருக்க கட்டளையிடுகிறது. இத்திருமறை வட்டியை (2:275), புறம்பேசுவதை (49:12), வறுமைக்குப் பயந்து  குழந்தைகளைக் கொலை செய்வதை (17:31), இஹ்ராம் அணிந்தி ருக்கும் சமயத்தில் வேட்டையாடுவதையும் (5:1), தானாகச் செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் கூறப்பட்ட அறுக்கப்பட்ட விலங்குகளை உண்ணுவதையும் (5:3) தடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கிறது.

 

       இது புகழுக்குரிய ஞானமிக்கவனான இறைவனால், எழுதப் படிக்க தெரியாத உம்மி நபிக்கு அருளப்பட்டது. இதன் நடை, உரைநடைக் கும் கவிதைக்கு இடைப்பட்டது. குர்ஆனிலிருந்து யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு  பத்து மடங்கு வெகுமதி கிடைக்கும். நபி   அவர்கள் கூறியபடி, "குர்ஆனை மனனமிட்டு ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளுடன் இருப்பவர் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகிற வருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு." தினந்தோரும் குர்ஆனை ஓதுபவர் இருவுலகிலும் மேன்மை அடைவார்.

 

       குர்ஆன் மறுமையில் அதை ஓதியவரை பரிந்துரைக்கும். நபிﷺ  அவர்கள் கூறியுள்ளார்:  "நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக் கூடியதாகும். அது ஏற்கப்படக் கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான்.குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவர் மிகச்  சிறந்தவர்.

           அல்லாஹ் கேட்கின்றான்: "நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம் எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? '' (54:32)

   எனவே குர்ஆனை வாசியுங்கள். அது உங்கள் வாழ்க்கையின் பயனை அடையச் செய்யும். மறுமையில் உங்கள் அந்தஸ்த்தை உயர்த்தும். உங்கள் குரல் வளமாகும். உங்கள் உள்ளம் அமைதி பெறும். இவ்வுலகில்  நீங்கள் கடைசியாக ஓதிய அல்லாஹ்வின் வசனத்தை பொறுத்து சுவர்க்கத்தில் உங்கள் நிலை அமையும்.

 

    



No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...