Wednesday, October 12, 2022

 

1. குர்ஆனின் முஸ்' ஹஃப் (مصحف) என்றால் என்ன?  

பதில்: முஸ்'ஹஃப் என்றால் "எழுதிய பக்கங்களின் தொகுப்பு" அல்லது குர்ஆனின் "அச்சடிக்கப் பட்ட புத்தகம்".

அல்லாஹ்விடமிருந்து  குர்ஆன் இறங்குதல்:

குர்ஆன் சிறிது சிறிதாக அல்லாஹ்வால் இருபத்தி மூன்று வருடங்களில் இறக்கப்பட்டு, முழுமை அடைந்தது என்பது உங்களுக்குத் தெரிந்த ஒன்று.

ஜிப்ரீல் (அலை) அதை அல்லாஹ்(ﷻ) விடமிருந்து பெற்று, முஹம்மத் (ﷺ) அவர்களுக்கு வஹி மூலம் போதித்து வந்தார். வஹி வரும் போது நபி (ﷺ)அவர்களுக்கு காதில் மணியடிப்பது போல் கேட்கும். அல்லது ஜிப்ரீல் (அலை) மனித உருவில் வந்து அதை அவருக்கு கற்றுக் கொடுப்பார்.

வஹி வந்தவுடன் நபி (ﷺ) அவர்கள் தன்னோடு இருக்கும் 42 எழுத்தர்களிடம் உடனேயே அவ்வசனங்களை எழுத கூறுவார். அவர்கள் எழுதியவுடன் வாசிக்கக் கோரி ஏதாவது பிழை இருந்தால் திருத்துவார். எழுத்தர்களும் காகித்திலோ, துணியிலோ, எலும்புகளிலோ, கற்களிலோ, தோலிலோ எழுதுவர். நபி தோழர்கள் பலர் உடனே அதனை மனனமும் செய்வர்.

குர்ஆனை சரிபார்த்தல்:

"ஜிப்ரீல் (அலை) ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில், நபி (ﷺ) குர்ஆன் ஓதும் போது அதை சரி பார்ப்பார். நபி அவர்கள் ஒஃபாத் அடை வதற்கு முன்பு இரு தடவை வந்து சரி பார்த்தார்." என்று அபுஹுரைரா (ரஜி) அவர்கள் அல் புஹாரியில் (4614) கூறியுள்ளார்.

"நபி (ﷺ) அவர்கள் ஒவ்வொரு ரம்லான் மாதத்திலும் கடைசி பத்து நாட்க ளுக்கு இதிகாஃப் இருப்பார். ஆனால் அவர் இறைவனடி சேர்ந்த வருடத்தில் இருபது நாட்கள் இதிகாஃப் இருந்தார்.''

இதையே நபி (ﷺ) அவர்கள் பீபி ஃபாத்திமாவிடம் இறைவனடி சேர்வதற்கு முன்: "ஜிப்ரீல் (அலை) அவர்கள் குர்ஆனை சரி பார்க்க ஆண்டிற்கு ஒரு முறை வருவார். இவ்வருடம் அவர் இருதடவை வந்தார்.  இதனால் இவ்வருடத்துடன் என் காலம் முடிவடைதாக இருக்கலாம்........" என்று கூறினார்.

குர்ஆன்  தொகுக்கப்பட்டது:

கலிஃபா அபு பக்ர் (ரஜி) காலத்தில் குர்ஆன் தொகுக்கப்பட்டது. 70 காரி (குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்)கள் யமாமா யுத்தத்தில் ஷஹீத் ஆனார்கள். ஆகையால் உமர் (ரஜி) அவர்களுக்கு குர்ஆன்,  முஸ்லிம்களின் மரணத்தோடு காணாமல் போய் விடுமோ என்ற பயம் ஆட்கொண்டது. அவர் கலிஃபாவுடன் வந்து தன் அச்சத்தை கூற கலிஃபா அவர்கள் நபி (ﷺ) செய்யாத காரியத்தை நாம் செய்வதா? என்ற கேள்வி கேட்டு அதை மறுத்தார்.

உமர் (ரஜி) திரும்ப திரும்ப கூறியதும் அதில் உள்ள உண்மையை உணர்ந்த அவர், அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

அபு பக்ர் (ரஜி) அவர்கள் பன்னிரண்டு பேர் கொண்ட குழுவை ஜைத் பின் தாபித் (ரஜி) அவர்கள் தலைமையில் நியமித்தார். அக்குழு குர்ஆனின் வசனங்கள் எழுதப்பட்ட எல்லாப் பொருட்களையும்  உமர் (ரஜி) அவர்கள் வீட்டில் சேகரித்தனர்.

ஒவ்வொரு  வசனமும்  மனனம் செய்தவர்களை ஓதச்செய்து,  ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்யப்பட்டது.  ஒவ்வொருவரும்  தான் கொண்டு வந்த வசனங்களை இரண்டு சாட்சிகள் கொண்டு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு தொகுக்கப்பட்ட குர்ஆனை பொது மக்கள் கூட்டத்தில் வாசித்து மீண்டும் உறுதி செய்யப்பட்டது. 33,000 நபி தோழர்கள் குர்ஆனில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் அதன் அதன் இடத்தில் சரியாக உள்ளது என்று ஒருமுகமாக அங்கீகரித்தனர்.

முஸ்ஹஃப்:

இந்த முஸ்ஹஃபில் 6,236 வசனங்களும், 114 ஸுராக்களும் 323,000 எழுத்துக்களும் அமைந்துள்ளன. ஸயித் இப்னு அல் ஆஸ் (ரஜி) தன் அழகான கையெழுத்தால் மான் தோலில் எழுதினார். அக்குர்ஆன் அக்காலத்தில் வழக்கத்திலிருந்த உள்ள அரபி மொழியில் எழுதப்பட்டது. அதில் வாசிக்க ஏதுவாக இருக்கும் புள்ளிகளோ கோடுகளோ இல்லாமல் இருந்தது. இவ்வாறு குர்ஆனின் முஸ்ஹஃப் முதன் முதலாக தயாரிக்கப்பட்டது.

இவ்வாறு தயாரித்த முஸ்ஹஃப் உமர் இப்னு கத்தாப்பின் (ரஜி) அவர்களின் பொறுப்பில் கண்காணிக்கப்பட்டது. அவர் மரணத்திற்குப் பின் அவர் மகளும்,  நபி (ﷺ)அவர்களின் துணைவியருமான ஹஃப்ஸா (ரஜி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருக்குர்ஆனின் பிரதேச மொழி வேறுபாடு:

டமாஸ்கஸ் முஸ்லிம்களுக்கும் இராக்கிற்கும் இடையில் நடந்த போரின் போது, குர்ஆன் வாசிப்பதில் அவர்களிடையே சில வித்தியாசங்கள் இருப்பதைக் கண்ட ஹுதைஃபா (ரஜி) என்ற நபி தோழர் கலிஃபா உதுமான் (ரஜி)டம் வந்து அதைப்பற்றி கூறினார். அவரும் 25வது ஹிஜ்ரி ஆண்டில் ஜைத் பின் தாபித் (ரஜி) தலைமையில் ஒரு குழு அமைத்து,    குரைஷி வட்டார மொழியில் குர்ஆனை தொகுத்து அதனை ''முதன்மை நகலாக'' அமைத்தனர்.

வாசிப்பதில் சிறிய வித்தியாசங்களுடைய ஏழு பிரதேச அரபு மொழிகளில் குர்ஆனை வாசிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் எழுத்திலும் கருத்திலும் எந்தவித மாற்றமும் குர்ஆனில் செய்யப்படவில்லை.

முழுமையில்லாத, விவாதம் நிறைந்த பிரதிகளை எல்லாம் சேகரித்து, பின் னாளில் பிரச்சனை ஏதும் வராமலிருக்க அவற்றை யெல்லாம் அவர்கள் அப்போது எரித்து விட்டார்.

குர்ஆனின் பிரதிகளை தயாரித்தல்:

முதன்மை நகலில் இருந்து உதுமான் (ரஜி) அவர்கள் ஏழு பிரதிகளின் நகல் எடுத்தார். இன்றளவும் உலகம் எங்கிலும் வாசிக்கப்பட்ட குர்ஆனில் எந்த வித வேற்றுமையும் கிடையாது. ஏனெனில் அவை முதன்மை நகலில் இருந்து எடுத்த முஸ்-ஹஃப்களாகும்.

நகல் எடுக்கப்பட்ட பிரதிகள் மனனம் செய்த காரிகளோடு பஹரைன், டமாஸ்கஸ், பாஸ்ரா, குஃபா, யமன், மக்கா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.

உதுமான் (ரஜி) அவர்கள் குர்ஆனை சரியான முறைப்படி  வாசிக்கவும் எழுதவும் கற்றுத்தரும் கல்வி நிலையங்களை அமைத்தார்.

அலி (ரஜி) அவர்கள் அரபியர் அல்லாதவர் படிப்பதற்கும்,  எழுதுவதற்கும் ஏதுவாக புள்ளிகளையும் கோடுகளையும் மேலும், கீழும், எழுத்திற்கு இடை யிலும், எழுத்தினுள்ளும் அதன் ஓசை கேற்ப புகுத்தி குர்ஆனை சரியாக வாசிக்க உதவினார். உம் மயத் கலிஃபா அப்துல் மலீக் குர்ஆனில் சில உயிர் அடையாளங்களை  கூட்டி எழுதினார். அதற்குப் பிறகு குர்ஆனில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இவ்வாறாக அல்லாஹ் سبحانه وتعالىٰ  திருக்குர்ஆனில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த விடாமல் அதனை இன்றளவும் பாதுகாத்துக் கொண்டிருக் கின்றான்.

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...