Wednesday, October 26, 2022

 

15. எந்த தொழுகை சிறந்தது என திருக்குர்ஆன் கூறுகிறது

   அ. அல்லாஹ்விற்கு  பணிந்து உள்                                   அச்சத்துடன் தொழும் தொழுகை.

   ஆ. நேரத்தோடு தொழும் தொழுகை.

   இ. அஸர் தொழுகை.

   ஈ.  மேற்கூறிய எல்லாம்

 

பதில்: ஈ. மேற்கூறிய எல்லாம்.

கீழ்காணும் இரண்டு வசனங்களிலிருந்து பதில் எடுக்கப்பட்டுள்ளது. "நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது." (4:103).

"தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை ("சலாத்துல் உஸ்தா”) பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின் போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்." (அல் பகறா, 2:238). "சலாத்துல் உஸ்தா" என்பது எல்லா தொழுகையை விட மேலானது. சிலர் அஸர் தொழுகையை உயர்ந்த தொழுகை என குறிப்பிடுகின்றனர்.

நபி   அவர்களும், ''யார் ஃபஜர் மற்றும் அஸர் தொழுகையை தொழுகி றார்களோ அவர்கள்  சுவனம் செல்வர்" என்றும், "யார் வேண்டும் எனறே அஸர் தொழுகையை தொழவில்லையோ அவருடைய காரியங்கள் யாவும் ஒன்றும் இல்லாமல் வீணாகிபோய்விடும்" என்றும் கூறியுள்ளதால் அஸர் தொழுகை உயர்ந்தாக கருதப்படுகின்றது.

திருக்குர்ஆனில் அல்லாஹுதாலா பல இடங்களில் தொழுகையை கடைப் பிடிக்கும் படியும் ஜகாத் கொடுக்கும்படி யும், கட்டளையிடுகின்றான். அவன் திருநாமத்தை கூறி, தொழுகைக்குப் பின் பாவமன்னிப்பு கேட்கும்படி வழி காட்டுகின்றான்.

* ஒரு விசுவாசி தொழும் போது மிகவும் பக்தியுடன் தொழ வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: "நயவஞ்சகர்கள் தொழுகைக்கு நிற்கும்  பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்). இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை." (4:142). ஆனால் வெற்றி பெறும் விசுவாசிகள் "எத்தகைய யோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்." (23:2).

* தொழுகையைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேடவும்:  அல்லாஹ் சுப்ஹானஹுதாலா கூறுகின்றான், "மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்." [2:45]

தொழுகையின் பயனை குறித்து அல்லாஹ் கூறுகின்றான்:

* "தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டும் விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு  மிகவும் பெரிதாகும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்." (29:45)

* பகைவர்களின் பயத்தாலும், பயணத்தின் போதும் தொழுகையை சுருக்கிக்கொள்ளலாம்: "(பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்." (2:239).

* "நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்." (4:101).

* விசுவாசிகள் தம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு உபதேசிக்க வேண்டும்: "உம் குடும்பத் தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக!'' (20:132).

* சிறந்த விசுவாசி மற்றவற்றை விட தொழுகையை பெரிதாக மதிக்கின்றான்: "துதி செய்யும் மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பாராமுகமாக்கமாட்டா. " (24:37).

* தொழுகையை கடைபிடிக்காதவர்கள் நரகம் செலவர்: ‘குற்றவாளிகளைப் பாரத்து கேட்கப்படும்: "உங்களை நரகத்தில் நுழைய வைத்தது எது?" என்று. அதற்கு அவர்கள்  (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் என்றும் நாங்கள் இருக்க வில்லை. அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. வீணானவற்றில் மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக் கிடந்தோம். இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம் உறுதி யான (மரணம்) எங்களிடம் வரும் வரையில்." என்று. (74:40-46)

* செல்வமும் பிள்ளைகளும் விசுவாசிகளை தொழ விடாமல் திசை திருப்பும்: "ஈமான் கொண்டவர் களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்க ளும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்க ளைப் பராமுகமாக்கி விட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்." (63:9)

* தொழுகை பற்றி நிறைய தடவை கூறிய அல்லாஹ், கடைசியாக குர் ஆனில் விசுவாசிகளை எச்சரிக்கின்றான்: "கவனமற்ற தொழுகையாளிக ளுக்குக் கேடு தான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்பர்." (107:4 & 5).

தொழுவதால் ஏற்படும் பலன்கள்:

  இதனால் அல்லாஹ் இட்ட கட்டளை/அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தம் நிறைவேறப்படுகின்றது.

  அல்லாஹ்வை நினைவு கூற உதவுகிறது.

  அல்லாஹ்விடம் நம்மை சமர்ப்பிக்க ஏதுவாகிறது.

  நம்மை படைத்தவனிடம் பேச முடிகின்றது

  அல்லாஹ்விடம் நம் உறவை பலப்படுத்த உதவுகிறது.

  அல்லாஹ் நமக்கு கொடுத்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த      உதவுகிறது.

  நேர்வழியில் செல்ல தொழுகை ஒளியாய் அமைகிறது.

  உடலையும் ஆன்மாவையும் பரிசுத்தப்படுத்துகிறது.

  நேரந்தவறாமையை நடைமுறை படுத்துகிறது

  மனதின் திறனை மேம்படுத்துகிறது.

  உடலின் ஒவ்வொரு பாகமும், எலும்பு, மூட்டுக்கள், நரம்புகள், இரத்த நாளங்கள் எல்லாம் தொழுகையால் புத்துணர்ச்சி பெறுகின்றது.

  அல்லாஹ்வின் பண்புகளை உணர முடிகின்றது

  ஷைத்தானை தோல்வியடைய செய்கிறது.

  சிறிய பாவங்களை நீக்கி சுத்தமடைய உதவுகிறது.

  ஈருலகிலும் வெற்றி பெற உதவுகிறது.

  மனதையும் எண்ணங்களையும் அமைதிப்படுத்தி சாந்தி அளிக்கிறது.

  தீர்ப்பு நாளில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் கணக்கு பார்க்கப்படும்

  தொழுகை மறுமை நாளில் நம் தராசின் எடையை அதிகரிக்கும்.

  நாம் செய்த நல்ல காரியங்களோடு தொழுகை நம் பெயரை சுவனத்தில் பதிவு செய்யும்.

  தொழுகை அல்லாஹ்வின் தீர்க்க தரிசனத்தை காணச் செய்து சுவனத்தில் அவன் அருகிலே இருக்கச்செய்யும். அதுவே நாம் அடைய விரும்பும் மிகப்பெரிய வெற்றியாகும்.

  தேவதூதர்கள் மசூதிக்கு செல்லும் தொழுகையாளிக்காக பிரார்த்திக் கின்றனர்:

"ஒருவர் தமது வீடு அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்து டன் தொழுவது இருபத்தி ஜந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது ஒருவர் உளூ செய்து அதை அழகாகவும் செய்து பின்னர் தொழவேண்டும் என்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஒரு அந்தஸ்த்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் இருக் கும் போதெல்லாம் அவருக்காக மலக்குகள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில், "இறைவா! நீ இந்த மனிதன் மீது அருள்புரிவாயாக, உனது கருணையை அவருக்கு வழங்குவாயாக என்றும் கூறுவார்கள்..........." (அபூஹு ரைரா (ரஜி) நூல் : புகாரி  - 647)

 

கீழே கொடுக்கப்பட்ட ஹதீஸுகள் சில தொழுகையைப் பற்றியவை:

       "அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நான் நபி  ﷺ  அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவ தாகும் என்று பதில் கூறினார்.'' என்று                அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரஜி)  (புகாரி - 527)  கூறினார்.

      ஐந்து தொழுகைக்கு இடையிலும், ஒரு வெள்ளி தொழுகையிலிருந்து மற்றொரு வெள்ளி தொழுகைக்கு இடையிலும்,  (எந்தவொரு பெரிய       பாவத்தையும் செய்யாதவரை), உள்ள நேரம்  பாவங்களுக்கு பிராயச்சித்தமாகும்.”

       "மனிதனுக்கும் இணை வைப்பு மற்றும் இறை மறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (இருப்பது) தொழுகையை கைவிடுவது தான்.” (ஜாபிர் (ரலி):      முஸ்லிம் -116)

       "உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கிறார். அவரது மேனியில் உள்ள அழுக்குகளில் எதுவும் மிஞ்சியிருக்குமா? கூறுங்கள்”என்று தோழர்களிடம் நபி அவர்கள் கேட்டார்கள். அவரது அழுக்கு களில் சிறிதளவும் எஞ்சியிராது என நபித்தோழர் கள் கூறினர். இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான் என்று நபி அவர்கள்  கூறினார்கள்."- (அபூஹுரைரா (ரஜி): புகாரி - 528)

      "சுவனத்தின் சாவி தொழுகை, தொழுகையின் சாவி ஒலு."

நபி அவர்களுக்கு மரண வேளையில், “தொழுகை யைப் பற்றியும் தங்களுடைய வலக்கரம் சொந்த மாக்கியுள்ள (அடிமைகளைப்) பற்றியும் வலியு றுத்திச் சொன்னார்கள்.”

 

                                         

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...