Sunday, March 17, 2024

 

7. ரம்ஜான் கேள்வி-பதில்

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

7. எந்த சமுதாயம் நாற்பது வருடங்கள் "பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்" என்று அல்லாஹ்வால் சபிக்கப்பட் டனர்?

பதில்: மூஸா (அலை) காலத்து இஸ்ராயீலின் சந்ததிகள்.

அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு மற்றவர்களை விட சிறந்த பல வளங்களை அருளினான்:

கிரேக்க, மற்றும் அக்காலத்தில் வாழ்ந்த பிற சமுதாயங்களைக் காட்டிலும் இஸ்ராயிலின் சந்ததிகளை அல்லாஹ் மதிப்பிற்குரியவர்களாக ஆக்கியிருந்தான். அவர்களுக்கு பல வளங்களை அருளியிருந்தான்.

அவர்களை அடிமைப் படுத்தி துன்புறுத்திய எதிரிகளை கடலில் மூழ்கி அழித்தான்.

தவ்ராத் வேதம்  அருளினான்

அவர்களிலிருந்து நபிகளை உருவாக்கினான்

மேகங்களை நிழலிடச் செய்தான்

மன்னு மற்றும் சல்வா என்ற உணவை நாள்தோறும் இறக்கினான்.

கற்பாறையிலிருந்து பன்னிரண்டு நீருற்றுகளை தோற்றுவித்தான்

சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டன.

இதை கீழ்கண்ட திருக்குர்ஆனின் வசனங்களால் அறியலாம்.

[5:20] அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்” என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்.

ஜிஹாத் செய்ய அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்:

புனித பூமியான ஜெருசலத்தில் நுழைய ஜிஹாத் செய்ய அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். ஜெருசல மக்கள் ஆஜானுபவனான, வலிமை மிக்க பலசாலிசாலிகள் என்று அவர்கள் அறியவந்தனர். பலவீனமான இஸ்ராயிலின் சந்ததியினரோ அவர்களோடு பொறுமையுடன் போர் புரிவதை தாங்க  முடியுமா என்று நினைத்துக் பார்க்கவே முடியவில்லை அவர்களால்.

இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறியுள்ளான்:

[5:21] (தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார்.

[5:22] அதற்கு அவர்கள், “மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள்; எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்” எனக் கூறினார்கள்.

அவர்கள் ஜிஹாத் செய்ய மறுத்தனர், கலகம் செய்தனர் எதிர்த்து நின்றனர்:

இஸ்ராயிலின் சந்ததியினர் ஜிஹாத் செய்ய மறுத்த போது நேர்மையான, இறையச்சமுள்ள, ஆசீர்வதிக்கப்பட்ட இரண்டு மனிதர்கள் (யூவ்ஷா - நூநின் மகன் மற்றும் காலிப், யூஃப்னாவின் மகன்) வெற்றி நிச்சயம் என்று வாக்களிக்கப் பட்டதால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து போரிட செல்லுமாறு ஊக்கப்படுத்தினர். ஆனால் அவர்கள் இருவருடைய போதனையையும் வீணாக்கினர்.

திருக்குர்ஆன் கூறுவதாவது:

[5:23] (அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந் தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்; அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) “அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின் களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினர்.

[5:24] அதற்கவர்கள், “மூஸா வே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக  நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.

 இதனால் மூஸா (அலை) மிகவும் கோபம் அடைந்து அவர்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்தார்:

என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!” என்று மூஸா (அலை) கூறினார். [5:25].

 ஆகையால் அல்லாஹீதாலா அவர்களை தண்டித்தான்:

[5:26] (அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என கூறினான்.

அல்லாஹ் மூஸா (அலை) மிற்கு ஆறுதல் அளித்தான்:

 அல்லாஹ் கூறினான்:  நான் கொடுத்த தீர்ப்புக்காக. நீர் அவர்களைப்பற்றி கவலையோ துன்பமோ பட வேண்டாம் ஏனெனில் அவர்கள் அந்த தீர்ப்பிற்கு தகுதியானவர்கள்.

இவ்வளவு தண்டனைப் பெற்ற பிறகும் அவர்கள் கீழ்   படியவில்லை. மேன் மேலும் பாவங்களோ செய்தார்கள்:

அவர்கள் அந்த இடத்தில் நாற்பது வருடங்கள் அலைந்து திரிந்தார்கள். அந்த காலத்தில் மூஸா (அலை)ஹாரூன் (அலை) மற்றும் நாற்பது வயதிற்கு மேம்பட்ட மக்கள் இயற்கை எய்தினார் கள். நாற்பது ஆண்டுகள் கழிந்த பின் அவர்களுடைய இரண்டாம் தலைமுறையினர் யூவ்ஷா தலைமையில் ஜெருஸலத்தை முற்றுகை யிட்டார்கள். அந்த நாள் வெள்ளிகிழமை. சூரியன் மறையப் போகும் நேரத்தில், ஸபத் (சனிக் கிழமை) தொடங்குவதற்கு முன் அல்லாஹீ தாலாவின் கருணையால் ஜெருஸலத்தை வென்றார்கள். இதற்கு முன் பார்த்திராத செல்வத்தை அடைந்தார்கள்.

அதற்கு பின் அல்லாஹ், இஸ்ரவேலர்களை ஹித்ததுன் (எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக) என்று கூறி அதன் வாசல் வழியாக தலைகுனிந்து நுழையுமாறு யூவ்ஷாவிற்கு கட்டளயிட்டான். ஆனால் அவர்களோ அதைத் தவிர்த்து, வேறு பொருள் படும்படி திரித்து கூறி பின் பக்கமாக ஊர்ந்து சென்றனர்.

الحمدلله

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...