15. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
15. சூரா பலத், வசனம் 11, 12-ல் கூறப்பட்ட [الْعَقَبَةُ] என்றால் என்ன?
பதில்: [الْعَقَبَةُ] "அகபத்" என்றால் மலைக்கு மேலே செல்லும் செங்குத்தான பாதை [கணவாய்]. நல்லவர்கள் முக்தி பெறும் கஷ்டமான பாதை.
அல்லாஹீதாலா சூரா பலத்தில் இவ்வாறு கூறுகிறான்:
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை
உமக்கு எது அறிவிக்கும். (அது) ஓர்
அடிமையை விடுவித்தல்- அல்லது,
பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும். உறவினனான ஓர்
அநாதைக்கோ, அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர்
ஏழைக்கோ (உணவளிப் பதாகும்). பின்னர், ஈமான் கொண்டு,
பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில்
இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும். அத்தகையவர் தாம் வலப்புறத்தில்
இருப்பவர்கள். (90:10 -18).
இருபாதைகள்:
ஒரு மனிதன் ஒரு மலையின் கீழ் நிற்கின்றான். அவனெதிரே இரண்டு பாதைகள். ஒன்று வலப்புறத்தில். மற்றொன்று இடப்புறத்தில். அல்லாஹ் அவனுக்கு அவ்விரு பாதைகளும் எங்கு செல்கின்றன என்று தெளிவாய் அறிவித்திருக்கிறான். அந்த இரண்டு பாதைகளிலும் ஏறினால் அதன் இலக்கினை அடையலாம். ஒரு பாதையை எளிதாக கடக்கலாம். ஆனால் அதன் இலக்கு மிகவும் கடினம். மற்றொரு பாதை கடக்க மிகவும் கஷ்டமானது. ஆனால் அதன் இலக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. இரண்டு பாதைகளிலும் அல்லாஹ் சோதிப்பான். மனிதர்கள் கஷ்டப்படுவதை விட இலேசாக இருப்பதை தான் விரும்புவர். சிலர் இலேசான பாதையை விரும்பி இலக்கை அடைந்ததும் கஷ்டப்படுவர்.
அல்லாஹ் நல்லவர்கள் முக்தி பெறும் கஷ்டமான பாதையை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கின்றான்:
நமக்கு தெரியாது நாம் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று. ஆகவே அல்லாஹ் நமக்கு வழிகாட்ட, ஒரு வேதத்தை இறக்கி இப்பாதையை எளிதாக கடக்க உதவியுள்ளான். அவை தான் கீழே கொடுக்கப்பட்ட செயல்கள்:
அடிமையை விடுவித்தல்:
அடிமையை விடுப்பது என்பது அல்லாஹ்விடத்தில் மிக்க பெருமை வாய்ந்த செயல். மஸ்னாத்திலிலுள்ள ஒரு ஹதீஸில், ஒருவர் நபி ﷺ யிடம் வந்து, "நபியே! எந்த செயல் சுவர்க்கத்திற்கு பக்கம் இழுத்துச் செல்லும், நரகத்தை விட்டு தூரமாக அழைத்துச் செல்லும்" என கேட்டார் அதற்கு நபி ﷺ அவர்கள், "ஓர் மனிதனை அடிமை தளத்திலிருந்து விடுவிப்பதாகும்" என்றார்.
இன்னொரு ஹதீஸில் நபி ﷺ அவர்கள் சொன்னதாக அபு ஹீரைரா (ரஜி) கூறக் கேட்டதாக ஸைத் பின் மார்ஜானா குறிப்பிடுகிறார்:" ஒரு முஸ்லிம் அடிமையை விடுவிப்பவரின் உடலின் ஒவ்வொரு பாகத்தையும், அவனது அந்தரங்க உறுப்பை கூட நரக நெருப்பிலிருந்து அல்லாஹ் விடுவிப்பான்."
நபி ﷺ அவர்கள் காலத்தில் பெரிய, ஜிஹார் போன்ற பாவங்களுக்கு அடிமையை விடுவித்தல் ஒரு பரிகாரமாகும்.
பசித்திருக்கும் நாளில் உணவளித்தல்:
இஸ்லாத்தில் மற்றவர்களுக்கு உணவு கொடுப்பது என்பது மிக உன்னதமான செயல். இச்செயல் நம் பாவங்களுக்கு பரிகாரமாகும். இதற்காக மறுமையிலும் பலன் உண்டு. இது கஷ்டப்படுபவர்களின் துயரத்தை நீக்குகிறது. திர்மிதியில் ஓர் ஹதீஸ், நபி ﷺ அவர்கள் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது: "ஒரு முஸ்லிம் பசித்த இன்னொரு முஸ்லிமிற்கு உணவு தரும் போது அல்லாஹ் அவனுக்கு மறுமை நாளில் சுவர்க்கத்து பழங்களை உண்ணக் கொடுப்பான்."
நபி ﷺஅவர்கள் கூறியதாக சல்மான் பின் அமீர் அஹமதில் குறிப்பிடுகிறார்: " ஏழைக்கு தானதர்மங்கள் கொடுப்பது ஒரு தர்மச் செயல் என்றால் அதையே ஏழையான ஒரு உறவினருக்கு கொடுப்பது இரு தர்மச் செயல் என்று கருதப்படுகிறது; தர்மம் மற்றும் உறவினர்களை பேணுவது. அத்- திர்மிதி மற்றும் அந்- நஸாயும் இதை பதிவு செய்துள்ளது.
விடாமுயற்சியையும்,பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசித்தல்:
செங்குத்தான பாதையை கடக்கும் போது ஒருவர் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும். மேற்கூறிய நல்ல காரியங்களை செய்யும் போது துன்பங்கள் ஏற்படலாம். அந்த சமயத்தில் ஒரு நம்பிக்கையாளர் மற்றொரு நம்பிக்கையாளரை நிலையாக இருக்குமாறும் அதனால் மிகப்பெரிய வெகுமதி கிடைக்கும் என்று ஊக்கப்படுத்த வேண்டும். முக்கியமாக கீழே கொடுக்கப்படுவதற்கு விடாமுயற்சியும்,பொறுமையும் தேவை:
★ அல்லாஹ் கட்டளையிட்டது போல் அவனை வணங்கும் போதும்
★அவனது மற்ற
கட்டளைகளை நிறைவேற்றும் போதும்
★ அல்லாஹ்
தடுத்தவற்றிலிருந்து விலகி இருக்கும் போதும்
★ தீயவற்றை
கைவிடும் போதும்
★ நல்லவற்றை
கடைபிடிக்கும் போதும்
★ பாவச்
செயல் செய்ய தூண்டப்படும் போதும்
கிருபையைக் கொண்டும் இரக்கத்தைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசித்தல்:
கிருபையும் இரக்கமும் அல்லாஹ்வின் அதி முக்கியமான பண்புகள். கிருபை என்பது இரக்கத்தால் வருவது. ஒருவர் துன்பத்தோடு உள்ள மற்றவரிடம் இரக்கத்தோடு நடக்கும் போது அவருக்கு கிருபையை பரிசளிக்கிறார். இறை நம்பிக்கையாளர் கிருபை என்னும் அல்லாஹ்வின் பண்பை ஓர் அங்கமாக கொண்டவர். மனிதனின் கிருபை கீழ்கண்ட காரியங்களில் வெளிப்படுகிறது:
★ மற்றவர்களுக்கு நேர்வழி காட்டும் போது;
★ பொய்யான
விஷயங்களை மக்களிடமிருந்து நீக்கும் போது;
★ ஒடுக்கப்பட்ட
மக்களை அதிலிருந்து மீட்கும் போது;
★அது போலவே
சமூகத்தால் கைவிடப்பட்ட மனிதர்களை இனம் கண்டு மீட்கும் போது;
★ கொடுங்கோண்மையை நிறுத்தும்
போது;
★ பணக்காரர்கள்
ஏழைகளை சுரண்டும் போது.
பிரார்த்தனை:
யா அல்லாஹ்! எங்களுக்கு அகபாவை எளிதாக கடக்க வழிகாட்டு! எங்களை வலப்பாரிசத்தவரோடு சேர்த்துக்கொள்! ஆமீன்!
الحمدلله
No comments:
Post a Comment