11. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
11. எந்த நபி தோழர், இறை தூதர் ﷺ அவர்களின் எழுத்தராகவும், பின்னாட் களில் திருக்குர்ஆனை தொகுத்தவராகவும் இருந்தார்.
பதில்: ஸைத் பின் தாபித் (ரஜி).
ஸைத் பின் தாபித் (ரஜி), பனு கஜ்ரஜ் குலத்தை சார்ந்த நஜ்ஜார் கோத்திரத்தை சேர்ந்த மதீனாவாசி. அவர் தந்தையை இழந்தவர். 11 வயது சிறுவனாக இருந்த போது நபி ﷺ அவர்களிடம் சென்று பத்ரு போரில் கலந்துக் கொள்ள அனுமதி கேட்டார். அவருடைய சிறிய வயதின் காரணமாக நபி ﷺ அவர்களை அனுமதிக்க மறுத்தார். மனமுடைந்து போன சிறுவன் தன்னை தேற்றிக் கொண்டு குர்ஆன் மனனம் செய்வதில் ஈடுபட்டான். சில அன்சார்கள் அவனை அழைத்துக் கொண்டு நபி ﷺ அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! இந்த எங்களின் சிறுவன் ஸைது இப்னு தாபித், பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்தவன். நன்றாய் எழுதப் படிக்கத் தெரிந்தவன், புத்திக்கூர்மையுள்ளவன். குர்ஆனின் பதினேழு அத்தியாயங்களை மனனம் செய்து வைத்துள்ளான். தங்களுக்கு அருளப்பட்ட அதே நேர்த்தியுடன் அதை ஓதக்கூடியவனாகவும் இருக்கிறான். தனது இந்தத் திறமையையெல்லாம் தங்களது சேவைக்கு அர்ப்பணித்து தங்களுடனிருந்து மேலும் மேலும் ஞானம் பெருக்கிக் கொள்ள விழைகிறான். தங்களுக்கு விருப்பமிருந்தால் தயவுசெய்து தாங்களே அவனை ஓதச் சொல்லிக் கேட்டு, சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்”
ஸைது இப்னு தாபித் (ரஜி) அழகாய், தெளிவாய், நேர்த்தியுடன், ஏற்ற, இறக்கத்துடன் ஓத, ஒவ்வொரு வசனத்தையும் ஆரம்பித்து முடிப்பதில் இருந்த கவனமும் எந்தளவு உள்ளார்ந்து குர்ஆன் அவரது மனதில் இடம் பெற்றிருக்கிறது என்பது உடனே புரிந்துவிட்டது நபி ﷺ அவர்களுக்கு. ஸைது (ரஜி) சிறப்பாய் எழுத, படிக்கக் கூடிய திறமைசாலி என்பதை அறிந்து, அவரை யூத மொழியை கற்றுக் கொண்டு வருமாறு ஏவினார். இரவு பகல் என்று உழைத்து இரண்டே வாரத்தில் ஹீ்ப்ரு மொழி கற்றுத் தேர்ந்தார் அவர். அது போலவே 17 நாளில் சிரிய மொழியையும் கற்று, தயாராய் வந்து நிற்கிறார் ஸைத் (ரஜி). நபியவர்களுக்கு அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பாளராக ஆனார்.
அவரது மனனம் செய்யும் அறிவு, திறமை மற்றும் ஆர்வத்தையும் துல்லியமாகவும், கவனத்தோடும் எடுத்த காரியத்தை செவ்வனே செய்யும் ஆற்றலையும் கண்ட நபி ﷺ அவர்கள் அவரை குர்ஆனின் வசனங்களை எழுதும் எழுத்தராக நியமித்தார். அவர் ஒரு தடவை கூறினார், "நாங்கள் நபி ﷺ அவர்களுக்கு முன்னிலையில் திருக்குர்ஆனின் சிறு சிறு பகுதிகளை தொகுக்கும் பணியில் ஈடுபடுவோம்". என்று. அவர் அந்த இளவயதிலேயே நபி தோழர்களில் சிறந்த கல்விமானாக உயர்ந்தார். ஒரு தடவை நபி ﷺ அவர்கள், ""بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْم எழுதும் போது سین -ஐ தெளிவாக எழுதவும் என்று திருத்தி இருக்கிறார். நபி ﷺ அவர்களுக்கு வஹி இறங்கியவுடன், "ஸைதை (ரஜி) அழையுங்கள். அவரை தோள் பட்டை எலும்பு, மைக்கூடு மற்றும் எழுதும் பலகைகளை கொண்டு வர கூறும்" என்பார்.
முதன் முதலாக திருக்குர்ஆனை தொகுத்து எழுதும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது:
ஸைத் பின் தாபித் (ரஜி) ஒரு பெரிய ஹதீஸில் இவ்வாறு கூறியுள்ளார்:
“அப்போது அபூ பக்ர் (ரஜி) (என்னிடம்) கூறினார்கள்: ‘உமர்
(ரஜி) அவர்கள் என்னிடம் வந்து, 'இந்த யமாமாப்
போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர்
நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு,
அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன்
பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்’
என்று கூறினார்கள். நான் 'இறைத்தூதர் ﷺ அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் (ரஜி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் (ரஜி) அவர்கள், ‘அல்லாஹ்வின்
மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று
கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில்
(தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்)
உமர் (ரஜி) அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ
பக்ர் (ரஜி) அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர் (ரஜி) (ஏதும்) பேசாமல் அபூ பக்ர் (ரஜி)
அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள். (பிறகு) அபூ பக்ர் (ரஜி) (என்னிடம்) 'நீங்கள்
புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்
சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர் ﷺ
அவர்களுக்காக வஹி (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று
திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.
“அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி ﷺ அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர் (ரஜி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்' என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன். முடிவில் எதற்காக அபூ பக்ர் (ரஜி) மற்றும் உமர் (ரஜி) ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன் வந்தேன்.) எனவே, நான் எழுந்து சென்று குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி (ரஜி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.
அவை: “உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான்.” (திருக்குர்ஆன் 09:128 , 129)
என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப
பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர் (ரஜி)
அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை
இருந் (து வந்) தது. பின்னர். (கலீஃபாவான) உமர் (ரஜி) அவர்களிடம்,
அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் (ரஜி) அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா (ரஜி) அவர்களிடம் இருந்தது. (ஸஹிஹ் புகாரி
4679).
இரண்டாவது தொகுப்பு:
இஸ்லாமிய அரசு அரேபியா சுற்றியுள்ள நாடுகளில் பரவ ஆரம்பித்த போது, பல இடங்களில் பல வட்டார மொழிகளில் திருக்குர்ஆன் ஓதப்பட்டது. இஸ்லாம் பரப்புவதற்காக வந்த நபி தோழர்களிடமிருந்து வாய்மொழியாக திருக்குர்ஆன் கற்றுக் கொண்டனர்: சிரியா நாட்டு மக்கள் உபய் இப்னு காப் (ரஜி) விடமும், குஃப்பான் நாட்டு மக்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரஜி) விடமும், ஹிம்ஸ் மக்கள் மிக்தாத் இப்னு அஸ்வத் (ரஜி) விடமும், பாஸ்ரா மக்கள் அபு மூஸா (ரஜி) விடமும் கற்றுக் கொண்டனர்.
இந்த நபி தோழர்கள், நபிகள் ﷺ அவர்களிடம் நேரிடையாக கற்றவர்கள். நபிகளும் அவர்களுக்கு அவரவர்களது வட்டார மொழிகளில் கற்று தந்திருக்கின்றார். அதனால் நபி தோழர்கள் தங்களுக்குக் கற்று தந்ததை பிறருக்கு கற்று தந்ததனால், அவர்களின் ஓதுதல் மற்றவர்களோடு தனித்திருந்தது.
ஹீதைஃபா இப்னு அல் யமன் (ரஜி) என்பவர் பல நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் போது இந்த வேற்றுமைகளை கண்டு அதிர்ந்தார். அப்போதைய கலீஃபாவான உஸ்மான் (ரஜி) விடம் சென்று "இந்த பிரச்சனையை கூறி நமது உம்மா பிளவு படாமல் இருக்கவும், யூதர்கள் கிறிஸ்தவர்கள் போல் நமது வேத நூல் மாறாமல், உலகின் பல பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற கூறினார்.
ஆகையால் உஸ்மான் (ரஜி) ஹஃப்ஸா (ரஜி) விடமிருந்து தொகுக்கப்பட்ட திருக்குர்ஆனை வாங்கி மாற்றி எழுதுமாறு திரும்பவும் ஸைத் பின் தாபித் (ரஜி) குழுத்தலைவராக நியமித்து புதிய பிரதிகளை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதை குரைக்ஷிகளின் வட்டார மொழியில், அதாவது ஒரே வட்டார மொழியில் எழுதுமாறும் அதனால் மாறுபாடுகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.
பிலால் ஃபில்ப்ஸ் என்பவர் தான் எழுதிய புத்தகத்தில், " உஸ்மான் (ரஜி), எழுதிய பதிப்புகளை அதை வாசிப்பவர்களோடு முக்கிய நகரங்களுக்கு அனுப்பினார். இது எல்லா நபி தோழர்களோடும் சேர்ந்து எடுத்த முடிவாகும். மற்ற எல்லா எழுதிய ஏடுகள் எரிக்கப்பட்டன. எனவே திருக்குர்ஆன் ஒரே பதிப்பாக வாசிக்கவும் எழுதவும் உலகத்து மக்களால் பயன்படுத்தப் படுகிறது.
குறியீட்டுகளும் உயிர்ரெழத்துகளும் அலி இப்னு அபி தாலிப் ஆட்சி காலத்தில் சேர்க்கப்பட்டன:
அரபிகள், எழுதியதை வாசிக்கும் போது ஒரு வாக்கியத்தின் அர்த்தத்தை பொருத்து அந்த ஒரு வாக்கியத்தின் வார்த்தைகளை உச்சரிப்பர். அந்த ஞானம் அவர்களுக்கு இருந்தது. இஸ்லாம் அரபியர் அல்லாத நாடுகளில் பரவிய போது அவர்களால் வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியவில்லை. ஆகையால் குறியீட்டுகளும் உயிர்ரெழத்துகளும் அரபிய எழுத்துக்களில் சேர்க்கப்பட்டன. அதனால் அராபியர் அல்லாதவரும் ஒரு வார்த்தையை சரியாக உச்சரிக்க எளிதாக இருந்தது. அலி இப்னு அபி தாலிப், தன் மாணவரான அபுல்-அஸ்வத் அல்-டோலிக்கு, திருக்குர்ஆனில் குறியீடுகளையும் உயிரெழுத்துக்களையும் சேர்க்கக் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மேலும் யஹ்யா பின் யாமர் மற்றும் நாஸ்ர் பின் அஸம் விரிவுபடுத்தினர், அவர்கள் இருவரும் அபுல்- அஸ்வததின் மாணாக்கர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ், ஷைத்தான்கள் திருக்குர்ஆனை திரித்து விடாமல் முழுமையாக பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். அல்லாஹ் வாய் வழியே இறக்கிய திருக்குர்ஆனை, ஓதும் போதும் எழுதும் போது ஏற்படும் அதன் பிரச்சனைகளையும் கஷடங்களையும் அதிகாரமிக்க மனிதர்கள் வழியாக நீக்கி அது எல்லா காலங்களிலும் எல்லா மக்களுக்கு பொருந்தும் வகையில் படிப்படியாக அதை அமைத்து உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் வாசிக்க ஒரே திருமறையாக ஆக்கினான்.
الحمدلله
No comments:
Post a Comment