Monday, December 5, 2022

 

55. "நிச்சயமாக என்னை துன்பம் தீண்டியி ருக்கிறது (இறைவனே!) கிருபை செய்பவர் களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவ னாக இருக்கின்றாய்" (21:83). இந்த துவாவை ஓதியது யார்? ஏன் ஓதினார்?

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்: அய்யூப் (அலை). தன் துன்பத்தை நீக்க.

 

அய்யூப் (அலை) என்ற நபி, இப்ராஹீம் (அலை) வழி தோன்றல்களில் வந்தவர். அவர் எப்பொழுதும் அல்லாஹ்வையே நினைத்துக்கொண்டும், நன்றி செலுத்திக் கொண்டும் இருப்பவர். பொறுமை யுடனும், மிக்க உறுதியுடனும், தன் கஷ்டங்களைச் சகித்து இறைவனிடம் மனம் வருந்தி மீண்டவர். அவரின் நல்ல குண நலன்களால் அவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தி  நற்கூலி வழங்கினான். (6:84).

ஒரு நாள் வானவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் திருப்தி யைப் பெற்ற தாழ்மை யான நல்ல அடியார்களைப் பற்றி விவாதித்து கொண் டிருந்தனர். ஒரு வானவர் கூறினார்: "இன்றைக்கு உலகின் மிகச்சிறந்த மனிதர் யார் எனில் அய்யூப் (அலை). அவர் நல்ல பண்பாளர், மிக அழகிய பொறுமையை கொண்டவர், தன்னை படைத்த இறைவனை எப்போதும் நினைத்து கொண்டிருப்பவர். இறைவனை வணங்குபவர் களுக்கு அவர் ஒரு முன் மாதிரி. ஆகையால் அவருடைய இறைவன் அவருக்கு  நீண்ட ஆயுளை யும், நிறைய பணியாளர்களையும் கொடுத்து அருளினான். அவர் ஏழைகளுக்கு உணவு, உடை அளித்தும், அடிமைகளை விலைக்கு வாங்கி அவர்களுக்கு விடுதலையளித்தும் இருந்தார். அவருடைய செல்வத்தில் ஏழைகளுக்கும், தேவை யுடையவருக்கும் பங்கு உண்டு. தான் உதவி செய்பவர்களை எல்லாம் அவர் தனக்கு உதவி செய்பவர்களாக நினைத்து கொள்வார். அவர் மிக்க கருணையும், மென்மையான குணமும் கொண்டவர்."

இதை எல்லாம்  கேட்டுக் கொண்டிருந்த இப்லீஸ் மிகுந்த கோபம் கொண்டு அய்யூப் (அலை) மிடம் விரைந்து சென்று அவர்  பிரார்த்திக்கும் போது அவருக்கு கவனக்குறைவை ஏற்படுத்தினான். உண்மையான விசிவாசியான அவர் ஷைத் தானின் தூண்டுதல்களிலிருந்து விலகி இருந்தார். இதைக் கண்டு மேலும்  கோபம் கொண்டு அல்லாஹ்விடம் சென்று அவருடைய செல்வத்தை எல்லாம் நீக்க வேண்டினான். அல்லாஹ், அவரு டைய பிரார்த்தனை அவர் மனதிலிருந்து வருவதே தவிர மிக்க செல்வத்தினால் அல்ல என்று கூறி னான். ஆனால் இப்லீஸ் அவருடைய பொறுமை யையும், விசுவாசத்தையும்  சோதிக்க தனக்கு உரிமை வழங்குமாறு  கோரினான். அல்லாஹ்வும் அவனுக்கு அதற்கான அதிகாரத்தை வழங்கினான்.

இப்லீஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவருடைய செல்வத்தை அழித்தான் அவருடைய கால்நடை களை அழித்தான். அவருடைய பணியாளர் களை அவரை விட்டு விலக ஏற்பாடு செய்தான். அவரிடம் சென்று செல்வத்தை அளவுக்கு மீறி மற்றவர்களுக்கு ஈந்ததால் அவர் இருந்ததை எல்லாம் இழந்தார் என்று சுட்டிக் காட்டினான்.

ஆனால் அய்யூப் (அலை) மோ, செல்வத்தை அல்லாஹ்வே கொடுத்தான். அதை அவனே எடுத்துக் கொண்டான், இதில் நான் வருத்தப் படுவது கூடாது என்று கூறி இறைவனுக்கு ஸஜ்தா செய்தார்.

இதை கேட்டும், கண்டும் இப்லீஸ் மிக்க விரக்தி அடைந்தான். அவன் அவர் வீட்டை நசுக்கி அவருடைய குடும்பத்தை அழித்தான். அய்யூப் (அலை) அப்பொழுதும் திடமான நம்பிக்கை கொண்டு தன்னை படைத்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினார். இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அய்யூப் (அலை) இன்னும் அதிகமாக அல்லாஹ்வை   நினைவு கூர்ந்தார்.

இதை கண்ட இப்லீஸ் அவருடைய உடம்பிற்கு ஏதேனும் துன்பம் தர விளைந்து அல்லாஹ்விடம் அனுமதி கேட்டான். அல்லாஹ் அவருடைய மனதிற்கும், அறிவிற்கும், ஆத்மாவிற்கும் துன்பம் கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவனுக்கு அனுமதி வழங்கினான். ஆகையால் இப்லீஸ் அவருக்கு ஒரு நோயினை தந்தான். அதனால் அவர் எலும்பும் தோலுமாக  ஆனார். ஆனால் அவரது ஈமான் முன்பை விட வலுவா கியது. பொறுமையுடன் தன் கஷ்ட காலத்தை எதிர் கொண்டார். எல்லோரும் அவரை விட்டு  விலகி சென்றனர். ரஹீமா என்ற அவர் மனைவி மட்டும் அவரது குணத்தை நன்கறிந்து இருந்ததால் அவர் கூட இருந்து அவருக்கு உதவினார்.

அவரது இறைநம்பிக்கையை கண்டு நம்பிக்கை இழந்த இப்லீஸ் தன் உத வியாளர்களோடு கூடி ஆலோசனை கேட்டான். அவர்கள் அவனை பார்த்து "ஆதம் (அலை) மை சுவர்க்கத்திலிருந்து  வெற்றி கரமாக வெளியேற்றிய புத்திசாலித்தனம் அய்யூப் (அலை) மிடம் வேலை செய்யவில்லையா?"  என கேலி செய்தனர்.

கடைசியாக ஷைத்தான் அய்யூப் (அலை) மனைவியிடம் சென்று அவரோடு அய்யூப் (அலை) கழித்த இன்பமான நாட்களை நினைவு படுத்தினான். அந்த நினைவிகளில் இருந்த அவர் தொடர்ந்து, தான் இப்போது கழிக்கும் துன்ப மான நேரத்தை நினைத்ததும் மனமுடைந்து அழுது விட்டார். அவர் தன் கணவரைப் பார்த்து," இன்னும்  எத்தனை நாள் தான் இந்த கொடுமையை தாங்கிக்  கொண்டிருப்பீர்? ஏன் நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கக் கூடாதா  இந்த துன்பத்தை போக்க வேண்டும் என்று?" என கேட்டார்.

அவர் பெருமூச்சு விட்ட படி மெதுவான குரலில், "இப்லீஸ் உம்மிடம் வந்து தூண்டிவிட்டதால், நீர் அதிருப்தியடைந்துள்ளாய்! சொல்! நான் எத்தனை வருடம் நல்ல செல்வத்தோடும், உடல் நலத்துடன் வாழ்ந்தேன்? என  கேட்டார். “எண்பது வருடங்கள்" என பதில் வந்தது. "எத்தனை வருடங்கள் நான் இந்த துன்பத்தை அனுபவிக்கின்றேன்?"  "ஏழு வருடங்கள்" என அவர் மனைவி பதில் கூறினார்.

"நான் என் துன்பத்தை நீக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வெட்கப் படுகின்றேன். ஏனெனில் நான் துன்பப்படும் நாட்கள் சந்தோஷமாக வாழ்ந்த நாட்களை விட மிகவும் சிறிது. நீ அல்லாஹ்வின் மீது மிகவும் அதிருப்தி அடைந்துள்ளாய்! அதற்காக என் உடல் உபாதை சரியானதும், தண்டனை யாக  உனக்கு 100 கசையடி தருகின்றேன்! இன்றிலிருந்து உன் கையால் உண்பதையும், குடிப்பதையும் தவிர்கின்றேன். என்னை தனியாக விட்டு விடு. என்னை என் இறைவன் தன் இஷ்டப்படி எதை செய்தாலும் நான் அதனை ஏற்றுக் கொள்கின்றேன்." என்று கூறினார்.

எல்லாவற்றையும் இழந்த நிலையில் இருந்த அய்யூப் (அலை) தன் இறைவனை நோக்கி கூறலானார்: "நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான்" (38:41)."நிச்சயமாக என்னை துன்பம் தீண்டியிருக்கிறது. என் இறைவனே! கிருபை செய்பவர் களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்" (21: 83). என்று பிரார்த்தித்தார்.

அதற்கு இறைவன் அவரை நோக்கி, "உம்முடைய காலால் (பூமியைத்) தட் டும்" (அவ்வாறு தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்)  "இதோ குளிர்ச் சியான குளிக்குமிடமும், பானமும் (உமக்கு) இருக்கின்றன"  என்று  கூறினார் (38:42). அவரும் இறை கட்டளையை நிறைவேற்றவுடன் அவர் உடல் பழைய நிலைக்கு திரும்பியது.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான், "பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிரு பையாகவும் அறிவுடையோருக்கு நினைவுட்டுதலாகவும் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம்"  (38:43).

இதையே திருக்குர்ஆனின் மற்றுமொரு இடத்தில், " அவருடைய பிரார்த்த னையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும்  வணங்குபவர்களுக்கு நினைவூட்டு தலாகவும் இருக்கிறது." (21:84)  என குறிப்பிட்டுள்ளான்.

மேலும் அல்லாஹ் அவருக்கு கட்டளையிட்டான்: "ஒரு பிடி புல் (கற்றையை) உம் கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்" (என  கூறினோம்). (38:44).

அல்லாஹுதாலா  அவரைப் பற்றி குர்ஆனில் குறிப்பிடுகையில்: "நிச்சயமாக நாம் அவரைப் பொறுமை உடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார். " (38:44) என்று புகழ்ந்துள்ளார்.

 ஓ அல்லாஹ்! எங்களுக்கும் அவரை போல் பொறுமையையும், சகிப்பு தன்மையையும், மனம் வருந்தி உன்னையே நோக்கும் ஆற்றலையும் எங்களுக்கு  கொடுப்பாயாக! ஆமீன்! யா ரப்!

الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...