Thursday, November 17, 2022

 

37. கோடிட்ட இடத்தை நிரப்புக:

37.  அதனால் அவர்களை நோக்கி, "சிறுமையடைந்த …………………… ஆகிவிடுங்கள்’’ என்று கூறினோம்.

பதில்: "குரங்குககளாக."

           ﺑِﺴْـــــــﻢِﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍلرَّﺣِﻴﻢ                 

கடற்கரையின் அருகே ஏலாத் என்ற சிறிய ஊர் இருந்தது  இப்போது அது இஸ்ரேலில் உள்ளது  அதில்  யூதர்கள் அதிகமாக  வாழ்ந்தனர். அவர்களின் முக்கிய தொழில் மீன் பிடித்தல். இஸ்ராயிலின் சந்ததிகள்  இறைவனின் கட்டளைப்படி ஸப்த் நாள் (சனிக்கிழமை) அன்று எந்த வித உலக காரியங் களிலும் ஈடுபடாமல் இறைவனை துதித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

அல்லாஹ் குர்ஆனில், "அவர்களுக்கு 'சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்' என்றும்  கூறினோம்.  இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்." (4:154). ஆனால் அம்மக்களோ தவறான காரியங்களில் ஈடுபட்டிருந்தனர்.  அவர்கள் தந்திரத்தோடு வாழ்ந்து வந்தனர்.

ஆகையால் அல்லாஹ் அவர்களை சோதிப்பதற்காக, சனிக்கிழமை அன்று எல்லா மீன்களும் கடலின் மேல் பரப்பில் நீந்திக் கொண்டு இருக்குமாறும், மற்ற நாட்களில் அவை கடலின் ஆழத்தில் சென்றுவிடுமாறும் செய்தார். ஆகையால் சனிக்கிழமை வரும் மீன்களை பிடிக்க அவர்கள் ஆசை பட்டனர். ஒரு தந்திரம் செய்தனர். வெள்ளிகிழமையே  மீன் வலைகளை விரித்து, கயிறுகளை கட்டி, கடலருகே மண்ணில் பள்ளம் தோண்டி கடல்நீரை அதில் பாய வைப்பர்.  சனிக்கிழமை கடல் மேல் மட்டத்தில் வரும் மீன்கள் திரும்பவும் கடல் ஆழத்திற்கு செல்ல முடியாமல் அதிலேயே மாட்டிக்கொள்ளும். அதை சப்த் முடிந்தவுடன் பிடித்துக் கொள்வர். அவர்கள் மிகவும் தைரியமாக, "நாங்கள் சனிக்கிழமை அன்றி மீன் பிடிக்கவில்லை !  ஸப்தின் வரம்பை மீறவில்லை, இறைவனின் கட்டளையையும்  மீறவில்லை" என்றனர்.  அதனால் அல்லாஹ் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்"  என்று கூறினான் (2:65)

இதைப்பற்றி  குர்ஆனின் ஏழாவது அத்தியாயமான அல் அராஃப் - ல் கூறியுள்ளான்: " (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம். (7:163).

அந்த ஊரில் இரண்டு வகையான மனிதர்கள் இருந்தனர். ஒரு வகையான மனிதர்கள்  வரம்பு மீறும் மனிதர்களுக்கு அறிவுரை கூறினர். இரண்டாவது வகை மனிதர்கள் வரம்பும் மீறவில்லை, வரம்பு மீறிய மனிதர்களையும் கண்டு கொள்ளவில்லை.  இரண்டாவது வகை மனிதர்கள், அறிவுரை கூறும் மனிதர்களைப் பார்த்து, “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு, அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.” (7:164)

அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர் களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.(7:165). தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் கூறினோம். (7:166)

குர்ஆனின் மற்றுமொரு இடத்தில், "அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்னு காதிர் தன்னுடைய  விளக்க உரையில் கூறுகிறார், "இளைஞர்கள் குரங்குகளாகவும், வயோதிகர்கள் பன்றிகளாகவும் மாற்றப்பட்டனர்"  என்று. இப்போதுள்ள குரங்குகளும், பன்றிகளும், அவைகளிடமிருந்து வந்தவை அல்ல.  அல்லாஹ் இந்த சம்பவத்தை ஒரு பாடமாக ஆக்கினான். "நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்." (2:66)

இஸ்ராயிலின் சந்ததிகளுக்கு அவர்கள் இறைவன் அவர்களை வெள்ளிகிழமை முழுவதும் அல்லாஹ்வை நினைக்க  கூறியிருந்தான். (அலை) மூஸா இருக்கும் வரை  கடைப்பிடித்த அவர்கள் அதை சனிக்கிழமைக்கு மாற்றினர். இறைவன், வாரம் முழுவதும்,  அதாவது ஆறு நாட்களில் எல்லாவற்றையும் படைத்துவிட்டு சனிக்கிழமை இளைப்பாரினார். ஆகையால் இவர்களும் அந்த நாளை புனித நாளாக நினைத்து அதை சனி கிழமைக்கு மாற்றினர் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: “சனிக்கிழமை (ஓய்வு நாள்)” என்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் - நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்.”  கிறிஸ்தவர்கள் யூதர்களிடமிருந்து மாறுபட  அதை  ஞாயிற்று கிழமையாக மாற்றினர்.  அல்லாஹ் நம் உம்மத்திற்கு வெள்ளி கிழமையை புனித நாளாக  தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அன்றைய தினம் அல்லாஹ்படைப்பதை முடித்தான்.

இந்த வசனங்கள் இறக்கியருளப்பட்ட பொழுது யூதர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இந்த வசனம் இறக்கப்பட்டு இருக்காது  என்று நம்பினர்.  இது யூதர்களை இழிவு படுத்தவும், பகைமை யுணர்ச்சியைதூண்டவும், போரை தொடுக்கவும், வேண்டும் என்றே புனையப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்று கூறினர்.

நபி (ﷺ) அவர்கள் கூறியதாக  இம்ரான் பின் ஹீஸைன் குறிப்பிட்டுள்ளார்:  “இந்த உம்மத்தில் சிலர் பூமியினால் விழுங்கப்படுவார்கள், மாற்றப் படுவார்கள், கற்களால் தாக்கப்படுவர்."  முஸ்லிம்களில் ஒருவர் கேட்டார்: “யா ரஸீலில்லாஹ்(ﷺ)! எப்போது அது நடக்கும்?”  என்று. அவர் கூறினார்:  "பாடும் அடிமை பெண்கள், இசை, மது பானம் ஆகியவை பரவலாக புழக்கத்தில் இருக்கும் போது" (ஜாமி அத்-திர்மிதி, 2212).

ஆகையால் நம்பிக்கையாளர்களே! உங்களையும் அல்லாஹ் சோதிப்பான். தடுக்கப்பட்ட காரியங்களை செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.  அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க நம்மை ஐந்து தொழுகைகளிலும் சூரா  ஃபாத்திஹாவின் கடைசி இரண்டு ஆயத்துக்களை (நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக (அது) எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி,  (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல) கட்டாயம் ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்!  நம்பிக்கையாளர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்! அல்ஹம்துலில்லாஹ்!

                          الحمدلله                                                                                                                 


No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...