Friday, October 28, 2022

 

17. ஆதம் (அலை) காலத்திலிருந்தே மனிதர்களுக்கு அல்லாஹ்வினால் அருளப்பட்ட முபாரக்கான பரிசுத்தமான நல்வாக்கியம் எது?

       1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

      2. மாஷா அல்லாஹ் லா குவ்வத இல்லா பில்லாஹ்

       3. பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்.

      4. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்ஹி வ பரகாத்தஹு.

      5. லா இலாஹ இல்லல்லாஹு வஹதஹு லா ஷரிகலஹு

      6. வலா ஹவ்ல‌ வலா குவ்வத இல்லாஹ் பில்லாஹ்

பதில்: اسلام عليكم. அஸ்ஸலாமு அலைக்கும். "உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக"

அல்லாஹ் குர்ஆனில்: "நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ் விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான - பாக்கியம் மிக்க - பரிசுத்தமான ("அஸ்ஸலாமு அலைக்கும்" என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் கூறுங்கள்" (அந் நூர், 24:61).

நபி அவர்கள் கூறினார்கள்: " அல்லாஹ் ஆத(அலை)மை படைத்த பின், "நீர் போய், அங்கு அமர்ந்திருக்கும் வானவர்களுக்கு முகமன் கூறுவீர். அம்முகமனும்  அவர்கள் கூறும் பதிலும் தான் உமக்கும் உம் சந்ததியின ருக்கும் முகமன் கூறும் வாக்கியம்" என்று கூறினார். ஆத(அலை)ம் அங்கு போய் இறைவன் கற்று கொடுத்த "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூற அவர்கள் "அஸ்ஸலாமு அலைக்க வ ரஹ்மதுல்லாஹ்" (சாந்தியும்  அல் லாஹ்வுடைய ரஹ்மத்தும் உம் மீது உண்டாவதாக!) என்று கூறினர்.

"அஸ்ஸலாமு அலைக்கும்" என்று யாராவது கூறினால் கட்டாயம் பதில் கூற வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது: "உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள். அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள்" (4:86).

ஒரு நபர் நபி யிடம் வந்து "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூற நபி அவர்கள் அந்நபர் அமர்ந்தவுடன் "பத்து வெகுமதி" எனறார். சிறிது நேரத்தில் வேறொருவர் வந்து "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்" என்ற கூறி அமர நபி அவர்கள் "இருபது வெகுமதி" என்றார். பின் மற்றொரு நபர் வந்து "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல் லாஹி வ பர்காதஹு" என்றவுடன் நபி அவர்கள் "முப்பது வெகுமதி" என்று கூறினார். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் இவ்வாக்கியம் எவ்வளவு  சிறந்தது  என்று.

நபி அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரஜி) பதித்துள்ளார்: "ஒரு முஸ் லிம் மற்றொரு முஸ்லிமை காணும் போது கட்டாயம் ஸலாம் கூறவேண் டும்".  நபி அவர்கள் சிறுவர்களை காணும் போது கட்டாயம் ஸலாம் கூறுவார்  என்று அனாஸ் பின் மாலிக் அறிவிக்கின்றார்.

வாகனத்தில் செல்வோர் நடந்து செல்வோர்க்கும், நடந்து செல்வோர் அமர்ந் திருப்போர்க்கும், சிறிய குழுவினர் பெரிய குழு வினர்க்கும் ஸலாம் கூற வேண்டும். "அலைஹாஸலாம்" "அலைஹிஸலாம்" என்ற அடை மொழி பெண் மற்றும் ஆண் நபிமார்களின் பெயருக்குப் பின் கூறப்படுகின்றது.

பலர் ஸலாமை சரியாக எழுதவோ கூறவோ மாட்டார்கள் அல்லது சுருக்கி கூறுவார்கள். பின் வரும் தவறான சொற்களை தவிர்க்க வேண்டும்:

                 🚫 அஸ்ஸலாம் ஓ அலைக்கும்

                 🚫 (வெறும்) ஸலாம்

                 🚫 ஸலாம்வஅலைக்கும்

                 🚫 அஸ்லாம் அலைக்கும்

சரியாக ஸலாமை கூறவும். சரியாக கூற கற்றுக் கொடுக்கவும்.

பிற மதத்தவருக்கு முதலில் நாம் ஸலாம் கூறக் கூடாது. அவர்கள் முத லில் ஸலாம் கூறினால் "வ அலைக்கும்" என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஸலாம் கூறுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு தடவை யூதர்கள் நபி பெருமானாரிடம் வந்து "உம்மீது மரணம் உண்டாவதாக" என்று பொருள்படும்படி  "அஸ்ஸா-மு-அலைக்கும்" என்று கூற நபி அவர்கள் "அது உங்களுக்கு ஏற்படுவதாக" என்று பொருள் கொண்ட "வ அலைக்கும்" என்று பணிவாக கூறினார். இதனை கேட்டுக் கொண்டிருந்த அவரது துணைவியார் ஆயிஷா (ரஜி): "உங்களுக்கு மரணமும் அவமதிப்பும் உண்டாவதாக" என்று கோபத்துடன் கூற நபி அவர்கள், "கடுமையான வார்த்தைகளை  கையாளமல் நான் கூறியதைப் போல்  "அது உங்களுக்கு ஏற்படுவதாக" என்று கூற வேண்டும் என்றார்". என்ன ஒரு பெருந்தன்மை!

மேலும் திருக்குர்ஆனில்: "எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்திருக்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப் படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள் என்றென்றும் அவற்றில் தங்கியிருப்பார்கள் - அங்கு அவர்களுடைய காணிக்கையாவது "ஸலாமுன்"  என்றும்; (14:23).

"பயபக்தியுடையவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படும் போது அதன் காவலர்கள் அவர்களை நோக்கி "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" என்றும்” (39:73).

"நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக 'ஸலாமுன் அலைக்கும்' உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!" (என்று கூறவார்கள்.) (13:24). இவர்களுக்கு(ச் சுவனபதியில) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்ட ழைக்கப் படுவார்கள் என்றும்” (25:75)

"அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாம் என்பதாகும். "எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்விற்கே" என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாக இருக்கும்”

என்றும் (10:10) குறிப்பிடப்பட்டுள்ளது.

(நபியே!) "நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது. அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்." (14:24 & 25).

இப்னு காதிர் அவர்கள் தம் விளக்க உரையில் மேல் கூறப்பட்ட வசனத்தில் குறிப்பிடப்பட்ட நல்வாக்கியம் "லாஇலா ஹ இல்லல்லாஹ்" என்று எழுதியள்ளார். ஆனால் குர்ஆனில் இவ்வசனங்கள் ஸலாமுன் என்பதற்குப் பின் வருவதால், இந்த நல்வாக்கியம் ஸலாமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...